

ஓய்வு ஐபிஎஸ் திலகவதி, மூத்த பெண் வழக்கறிஞர்கள் அடங்கிய பெண்கள் சட்ட பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பாலியல் உள்ளிட்ட பெண்களின் எந்த புகார் தொடர்பாக இலவசமாக சட்ட உதவி வழங்க இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாலியல் வன்முறைக்கெதிரான முறையீட்டுக்குழு சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:
“கோவை மாவட்டம் பொள்ளாச்சியல் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் வெளி வந்த செய்திகளின் அடிப்படையில் நாடு முழுவதும் பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.
2. பொள்ளாச்சியில் பெண்கள் குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்ற பாலியல் வன்முறையினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு குழந்தைகளுக்கு இலவச சட்ட உதவி செய்து இதன் மூலம் நீதியையும் பெற்றுத் தருவதற்கு, பல்வேறு தளங்களில் பணியாற்றி வரும் பெண்களாக நாங்கள் ஒருங்கிணைந்து பெண்கள் மட்டும் பங்கேற்கக்கூடிய ஒரு குழுவாக செயல்பட உள்ளோம்.
மேலும் எங்கள் குழுவிற்கு “பாலியல் வன்முறைக்கெதிரான முறையீட்டுக்குழு” என்று பெயர் வைத்துள்ளோம்.
பாலியல் வன்முறைக்கெதிரான முறையீட்டுக் குழுவானாது உசேன் இல்லம், எண் 7, கொண்டிசெட்டி தெரு, சென்னை-
600001 என்ற முகவரியில் செயல்படும் என்பதனை இந்த பத்திரிகையாளர் சந்திப்பு மூலம் அறிவிக்கின்றோம்.
பாலியல் வன்முறைக்கெதிரான முறையீட்டுகுழுவின் பிரதான நோக்கம் பொள்ளாச்சியில் பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி அவர்களது பயத்தை போக்கி தைரியமாக எங்கள் குழுவிடம் பேச வைப்பது, இதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இலவச சட்ட உதவியும் மேலும் பாதிக்கப்பட்டவர்களை ஆற்றுப்படுத்தி அவர்களுக்கு பாதுகாப்பும் நீதியை பெற்றுத் தருவது எங்களின் பிரதான நோக்கம் ஆகும்.
பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் அவர்கள் குடும்பத்தினர் 24 மணி நேரமும் எங்களை தொடர்பு கொள்ளும் விதமாக எங்களது குழுவின் சார்பாக 99943-68566 என்ற செல் நம்பரை வெளியிடுகிறோம். இந்த செல் நம்பரை எங்கள் குழுவை சார்ந்த பெண் ஒருவர்தான் கையாள்வார்.
எனவே பாதிக்கப்பட்ட பெண்கள் நம்பிக்கையோடு இந்த செல் நம்பரை தொடர்பு கொள்ளலாம். பாலியல் வன்முறைக்கெதிரான முறையீட்டுக் குழுவின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள 99943-68566 என்ற செல் நம்பரே வாட்ஸ்அப் நம்பர் ஆகும். இந்த வாட்ஸ்அப் நம்பரில் பாதிக்கப்பட்ட நபர்கள் அல்லது அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவக்கூடியவர்கள் மேற்கண்ட வாட்ஸ்அப்பில் நம்பரில் தகவல்களை அனுப்பலாம்.
பாலியல் வன்கொடுமை முறையீட்டுக்குழுவில் சார்பில் வெளியிட்டுள்ள செல் நம்பரில் பாதிக்கப்பட்டவர்கள் சொல்லக்கூடிய தகவல்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்கள் வாட்ஸ்அப் மூலமாக அனுப்பக்கூடிய தகவல் அனைத்தும் முழுமையாக பாதுகாக்கப்படும். பாதிக்கப்பட்டவர்கள் செல் நம்பர் மூலமாகவோ, வாட்ஸ்அப் மூலமாகவோ பேசுவதற்கு தகவல் அனுப்புவதற்கு தயக்கம் ஏற்பட்டால் பாலியல் வன்கொடுமை முறையீட்டு குழுவை சார்ந்த உறுப்பினர் யாரேனும் ஒருவரை தனியாக சந்தித்து பேச விரும்பினால் அதற்கான வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும்.
பொள்ளாச்சி பகுதியில் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் செல்போன் மூலமாகவோ, வாட்ஸ்அப் மூலமாகவோ தகவல் அனுப்ப தயக்கம் இருந்தால் பாலியல் வன்முறைக்கெதிரான முறையீட்டுகுழுவை சார்ந்த நபர்கள் பாதிக்கப்பட்ட நபரை பாதிக்கப்பட்டவர் விரும்பும் இடத்தில் நேரடியாக சந்தித்து உதவ தயாராக உள்ளோம்.
பொள்ளாச்சியில் பெண்கள் / குழந்தைகள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட வழக்கில் சி.பி.ஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதியை பெறுவதற்காக தேவைப்படும் பொழுது பாலியல் வன்முறைக்கெதிரான முறையீட்டுக்குழு பாதிக்கப்பட்டவர் சார்ந்த கிடைக்க பெற்ற வழக்கு சார்ந்த ஆவணங்களை சி.பி.ஐ விசாரணை குழுவினரிடம் ஒப்படைப்போம்.
பாலியல் வன்முறைக்கெதிரான முறையீட்டுக் குழுவானது பொள்ளாச்சியில் நடைபெற்ற பெண்கள் /குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண்கள்/ குழந்தைகளுக்கு இலவச சட்ட உதவி வழத்குவதற்காக மட்டும் அமைக்கப்பட்ட குழு அல்ல.
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் வன்முறையால் எங்கு பாதிக்கப்பட்டு இருந்தாலும் எங்களை அணுகி தேவையான இலவச சட்ட உதவி பாதுகாப்பை கோரலாம். பாலியல் வன்முறைக்கெதிரான முறையீட்டு குழுவானது தேவைப்படும் பொழுது பொள்ளாச்சிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், இயக்க செயல்பாட்டாளர்கள் மகளிர் குழுவினர்களை நேரில் சந்திப்போம்.
பாலியல் வன்முறைக்கெதிரான முறையீட்டுகுழுவின் ஒருங்கிணைப்பாளராக திருமிகு. திலகவதி ஐபிஎஸ்(ஓய்வு) இணை ஒருங்கிணைப்பாளர்களாக சுகந்தி, ஜனநாயக மாதர் சங்கம், வழக்கறிஞர் ஆதிலட்சுமி, லோகமூர்த்தி, வழக்கறிஞர் அங்கயற்கண்ணி, தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் செயல் அலுவலராக மூத்த வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் ஆகியோரை தேர்வு செய்துள்ளோம்.
பாலியல் வன்முறைக்கெதிரான முறையீட்டுகுழு (Forum for Complaints against Sexual Violence)உசைன் இல்லம், எண் 7, கொண்டி சட்டி தெரு, சென்னை-600 001 தொடர்பு எண் :99943-68566 வாட்ஸ்அப் : 99943-68566 ”
இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.