இசையும் இலக்கியமும் இணை பிரியாதவை!- மனம் திறக்கிறார் சந்தோஷ் நாராயணன்!
கோவையில் அண்மையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க வந்திருந்தார் பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். மெட்ராஸ், கபாலி, காலா, பரியேறும் பெருமாள் என பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்து, இளைஞர்களின் கவனம் ஈர்த்தவர் இவர். ‘பேட்டி’ என்றவுடன், அவரது இசையைப் போலவே துள்ளலுடன் பேசினார்.
தமிழ் ராப் இசை வடிவத்தினை அதிகமாகப் பயன்படுத்துகிற இசை அமைப்பாளர்களுள் நீங்கள் முக்கியமானவர். `கல்லி பாய்` போல ஒரு திரைப்படம் தமிழில் சாத்தியமா?
`தமிழ் ராப்’ வெகுகாலமாகவே தமிழ் சினிமாவில் இருந்து வருகின்றது. கல்லி பாய் திரைப்படம் போன்று, ராப் பாடகர்கள் குறித்து ஆவணப்படுத்தப்படும் படங்கள் தமிழில் வரவேண்டும். நமது கானா பாடகர்கள் நிறைய பேர், அதுபோன்ற வாழ்வைக் கடந்து வந்தவர்களே!
சுயாதீன இசைக் குழுக்கள் தமிழில் அதிகம் உருவாகாமல் போனதற்கு சினிமாவின் ஆதிக்கம் காரணமா?
அதை ஒரு காரணமாக சொல்ல முடியாது. நான் இரண்டையுமே ஒன்றாகத்தான் பார்க்கிறேன். இன்டிபெண்டன்ட் இசைக் குழுக்களின் பின்னணியில் வந்தவர்களுள் நானும் ஒருவன். இந்தப் பின்னணி தமிழ் சினிமா இசையமைப்புக்கு எனக்குப் பெரிதும் உதவியது. இன்றைய தமிழ் சினிமா இயக்குநர்கள் கதை சார்ந்து படங்கள் எடுப்பதில் கவனம் செலுத்துகின்றனர். ஆகவே, அதற்குரிய உழைப்பை நாங்களும் தரவேண்டியுள்ளது.
இலக்கியத்துக்கும், இசைவாணர்களுக்கும் இருக்க வேண்டிய உறவு குறித்து நீங்கள் நினைப்பது என்ன?
நம்முடைய தமிழை இழந்துவிட்டோம் என்றால், வேறொரு பண்பாடு, கலாச்சாரத்துக்கு சென்று விடுவோம். அதிலிருந்து வரும் இசை, வேறொரு இசை வடிவமாகவே இருக்கும்.
ஆகவே தமிழும், நமது பண்பாட்டு அடையாளங்களும் இசையில் இருப்பது அவசியம். ரஞ்சித், வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ், ராஜு முருகன், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் மூலம் இதைக் கற்றுக் கொண்டேன்.
உங்களது பிற துறை ஆர்வங்கள் என்ன?
இசை தான் எப்போதும் ஆர்வம். குடும்பத்தினருடன் சதுரங்கம், கிரிக்கெட் விளையாட ரொம்பப் பிடிக்கும்.
அடுத்த தலைமுறை இசையமைப்பாளர்களில் குறிப்பிடத் தகுந்தவர்கள் என யாரை நினைக்கிறீர்கள்?
கோவிந்த் வஸந்தா மிக முக்கியமானவர். `தைக்குடம் பிரிட்ஜ்’ இசைக் குழுவில் இருந்து வந்தவர். 96 திரைப்படத்தின் மூலமாக பிரமாதப்படுத்திவிட்டார்.
நீங்கள் பணிபுரிந்த மெட்ராஸ், காலா, பரியேறும் பெருமாள், வடசென்னை உள்ளிட்ட படங்கள் தலித் மக்கள் மற்றும் தலித் அரசியல் குறித்து பேசியவை. கதைக் கருவைப் போலவே பாடல்களும் மிகுந்த கவனத்தை ஈர்த்தவை. அதில் பணிபுரிந்த அனுபவம் குறித்து?
இயக்குநர்கள் கேட்பதை முடிந்த வரையில் நேர்மையாகக் கொடுப்பதற்கு முயற்சிக்கிறோம். நல்ல திரைப்படத்துக்கு அமைக்கும் இசை, அந்தத் திரைப்படத்தை நோக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும். நல்ல கதைக்கு கொடுக்கும் சிறந்த இசை, அதற்கு முழுமையை கொடுக்கின்றது. இயக்குநர்களும் தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றனர்.
மாரி செல்வராஜ், பரியேறும் பெருமாளுக்கு ஒரு பார்வையாளராக இருந்து, தன் படத்துக்கு என்ன வேண்டும் என்பதை தெளிவாகக் கூறினார். மிகவும் சுதந்திரமாக இசையமைக்க முடிந்தது.
