Published : 02 Mar 2019 05:09 PM
Last Updated : 02 Mar 2019 05:09 PM

தமிழகத்தை வஞ்சிப்பதால் கருப்புக்கொடி; மோடிமீது தனிப்பட்ட பகையோ, வெறுப்போ இல்லை: வைகோ

தமிழக மக்களைப்பற்றி அக்கறையில்லாமல், வஞ்சிப்பதால் அரசு விழாக்களுக்கு வரும் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டுகிறோம். தனிப்பட்ட பகையோ வெறுப்போ இல்லை என வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தப்போது கூறியதாவது:

 “நேற்றைய தினம் நடைபெற்ற பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டும் அறப்போராட்டத்தில் ஆயிரம்பேர் கலந்துகொண்டார்கள். நாங்கள் மிக அமைதியாக நடத்தினோம். நரேந்திர மோடி மீது எனக்கு தனிப்பட்ட பகையோ, வெறுப்போ கிடையாது.

ஆனால் கஜா புயலில் 89 தமிழர்கள் உயிரிழந்தபோது ஒரு வார்த்தை அனுதாபம் தெரிவிக்காத பிரதமர், 25 ஆயிரம் கோடி ரூபாய் இருந்தால்தான் தஞ்சை தரணியைக் காப்பாற்ற முடியும் என்ற நிலையில், ஒரு சதவீதம்கூட அனுமதிக்காத பிரதமர், ஹைட்ரோகார்பன் மண்டலமாக்கி காவிரி தீரத்தை பஞ்சப் பிரதேசமாக, பாலைவனமாக ஆக்குவதற்கு திட்டம் தீட்டி நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்.

மேகதாட்டில் அணை கட்டுவதற்கு முழு வீச்சில் இருப்பது பாரதிய ஜனதா கட்சிதான். வெளிப்படையாகவே அவர்கள் இப்போது புராஜெக்ட் அனுமதி வாங்கிவிட்டார்கள். உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து முடிவு செய்த முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரள அரசு புதிதாக அணை கட்டி, பென்னிகுயிக் அணையை உடைக்கப் போகிறோம் என்று அறிவித்துவிட்டது.

புதிய அணை கட்டுவதற்கு அவசியம் இல்லை என்று உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது. ஆனால் புதிய அணை கட்டுவதற்கு ஆய்வறிக்கை வாங்கியிருப்பதைவிட பச்சை துரோகம் தமிழ்நாட்டுக்கு வேறு எதுவும் இருக்க முடியாது. நியூட்ரினோ திட்டத்தின் மூலமாக இடுக்கி அணை, பென்னிகுயிக் கட்டிய முல்லைப் பெரியாறு அணை இடிந்துபோகிற பேராபத்து இருக்கிறது.

ஐந்து மாவட்டங்கள் பஞ்ச பிரதேசமாகும். சமூகநீதிக் கொள்கைக்குக் கொள்ளி வைக்கும்விதத்தில், பிற்படுத்தப்பட்ட இடஒதுக்கீட்டுக்கும், சமூக நீதிக்கும் எதிரான கொடுமை ஆகும். நீட் தேர்வைக் கொண்டுவந்து திணித்து, நம்முடைய கிராமப்புற மாணவர்கள் எதிர்காலத்தைப் பாழாக்கிவிட்டார்கள்.

மத்திய அரசு பணிகள் எதுவாக இருப்பினும் தமிழர்களுக்கு தற்போது தமிழ்நாட்டில் வேலை கிடைப்பது இல்லை. ஹிந்தி, சமஸ்கிருதம், இந்துராஷ்டிரா என்ற அபாயகரமான, நச்சுத்தனமான கொள்கையைக் கொண்டுவந்துத் திணித்து, இந்துராஷ்டிரம் அமைத்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்து, முஸ்லிம், கிருத்துவர், பார்சி, சீக்கியர், சமணர், பகுத்தறிவுவாதிகள் இணைந்து நல்லிணக்கமாக இருப்பதற்கு வேட்டு வைக்கிற விதத்தில் மதச்சார்பின்மையை முகப்புரையிலிருந்து எடுக்கப் போகிறோம் என்று சட்ட அமைச்சரே கூறிவிட்டார்.

முஸ்லிம்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டு, தாத்திரியில் கொல்லப்பட்ட நிலையில், முஸ்லிம்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று மந்திரிகள் பேசியதும், மகாத்மா காந்தி உருவத்தை மீண்டும் சுடுவதைப் போலச் சுட்டு, எரித்துத் தீ வைத்த கொடுமையைக் கண்டிக்காதது.

எதிர்காலத்தில் ஜனநாயகமே அழிந்துபோகும் என்ற விதத்தில் பாசிஸ்டாகவே மாறி வருகிற நரேந்திர மோடி தமிழகத்துக்குச் செய்த துரோகத்துக்கும், வஞ்சகத்துக்கும் தமிழர்கள் எதிர்ப்பைக் காட்டுவார்கள் என்று கஜா புயலில் நொறுங்கிக் கிடந்த தென்னை மரங்களுக்கு இடையில், ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் அரசு விழாக்களுக்கு என்றைக்கு வந்தாலும் கருப்புக்கொடி காட்டுவேன் என்று கூறினேன்.

தமிழக விவசாயிகள் ஆறு மாதம் கொட்டும் பனியிலும், கொளுத்தும் வெயிலிலும் காத்துக் கிடந்தார்கள். அவர்கள் சந்திப்பதற்கு பிரதமர் ஐந்து நிமிடம் அனுமதி கொடுக்கவில்லை. எனவே தமிழகத்துக்குள் அரசு விழாவில் பிரதமர் கலந்துகொண்டால் எதிர்ப்பைக் காட்டுவோம் என்ற விதத்தில் நாங்கள் அந்தப் போராட்டத்தை நடத்தினோம்.

தொலைக்காட்சி ஊடகங்களும், பத்திரிகையாளர்களும் உரிய விதத்தில் நடந்ததை நடந்தபடியே மக்களுக்குக் கொண்டுபோய் சேர்த்தார்கள். நான் சென்ற வண்டியிலும் கற்கள் வீசப்பட்டது. அதைச் சொன்னால் மக்கள் கொதிப்படைந்து விடுவார்கள் என்று அதை நான் சொல்லவில்லை. காவல்துறையினர் கண்ணியமாக நடந்துகொண்டார்கள்.

எங்கள் தோழர்களைக் கட்டுப்படுத்தினேன். பிரதமர் தேர்தல் பிரச்சாரத்துக்கு வருவது அவரது ஜனநாயக உரிமை. அதை நாங்கள் எதிர்க்கவில்லை.” இவ்வாறு வைகோ பேசினார்.

 

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x