Published : 26 Sep 2014 12:08 PM
Last Updated : 26 Sep 2014 12:08 PM

ராஜபக்ச உரை ஐ.நா. அமைப்புக்கே அவமரியாதை: வைகோ கண்டனம்

ஐ.நா. பொதுச்சபையில் இலங்கை அதிபர் ராஜபக்ச உரையாற்றியது அந்த அமைப்புக்கே பெரிய அவமரியாதை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுசபை கூட்டத்தில் அவர் மேலும் பேசிய இலங்கை அதிபர் ராஜபக்ச ஒரு நாட்டில் சர்வதேச விசாரணையை மேற்கொள்வதற்கு அழுத்தம் தரும் விதமாக மனித உரிமைகளை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்தார்.

இந்நிலையில் ராஜபக்ச பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வைகோ வெள்ளிக் கிழமை வெளியிட்ட அறிக்கையில்: "இலங்கைத் தீவில் லட்சக்கணக்கான அப்பாவிகளை ஈவு இரக்கம் இல்லாமல் உலகம் தடை செய்த குண்டுகளைப் பயன்படுத்தியும், ராணுவத்தை ஏவியும் கொன்று குவித்து, தமிழ் இனப்படுகொலை நடத்திய சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்s பன்னாட்டு நீதிவிசாரணைக்கு ஆளாக வேண்டிய குற்றவாளி.

அத்தகையவர் ஐ.நா. மன்றத்தின் பொதுச் சபையில், ஐ.நா. அமைப்பையே குற்றம் சாட்டியதும், இலங்கையில் சுதந்திரமான பன்னாட்டு நீதி விசாரணைக்கு தீர்மானித்த ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சிலின் மீது களங்கம் கற்பித்து, உலகத்தில் சில நாடுகள் தங்கள் சொந்தத் திட்டத்தை நிறைவேற்ற, மனித உரிமைகள் என்ற கருவியை பயன்படுத்துகிறார்கள் என்றும், ஐ.நா. அமைப்பில் பாரபட்சமான போக்கு நிலவுவதாகவும், அதனால் ஐ.நா.வின் நம்பகத்தன்மைக்கே கேடு என்றும் சகட்டுமேனிக்கு குற்றம் சாட்டியுள்ளார். இதைவிட ஒரு அவமானம் ஐ.நா.அமைப்புக்கு இருக்க முடியாது.

இந்தியாவின் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சிங்கள அதிபர் ராஜபக்சவுக்கு மனித உரிமை கவுன்சிலில் ஆதரவு தெரிவித்ததும், இன்றைய பிரதமர் நரேந்திர மோடியின் பதவி ஏற்பு விழாவுக்கு ராஜபக்சவை அழைத்துக் கவுரவப்படுத்தியதும், உலக நாடுகள் மன்றத்தில் இப்படி எல்லாம் வசை பாடுவதற்கு துணிச்சலை ஏற்படுத்தியது என்பதுதான் உண்மை.

இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இலங்கை வெளிவிவகார அமைச்சரிடம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டியே தொடர்ந்து இந்தியா மேற்கொள்ளும் என்று உறுதி அளித்ததும் இன்னொரு காரணமாகும்.

இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலைக்கு எதிராக தமிழ்நாட்டில் கட்சி வேறுபாடின்றி கோடான கோடி தமிழர்கள் கொந்தளித்ததும், 19 தமிழர்கள் தீக்குளித்து மடிந்து உயிர்த் தியாகம் செய்ததையும், இன்றைய நிலையிலும் தமிழகத்தில் இலங்கை அரசுக்கு எதிரான ஆத்திரமும் வேதனையும் ஏற்பட்டிருப்பதையும் இந்திய அரசு துச்சமாக எண்ணி, தமிழர்களை கிள்ளுக் கீரையாக நினைக்கின்ற போக்கு நீடிக்கிறது.

ஐ.நா.அமைப்புக்கே அவமரியாதை செய்கின்ற ராஜபக்சவை இத்தனைக்குப் பின்னரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க முற்படுவது தமிழர்களின் காயப்பட்ட நெஞ்சில் சூட்டுக்கோலைத் திணிக்கிற செயலாகும்.

கொடுமைக்கும் அநீதிக்கும் முடிவு ஒரு நாள் வந்துதான் தீரும். நடப்பது அனைத்தையும் வரலாறு தமிழர்களின் மனதில் பதித்துக்கொண்டே வருகிறது. வினை விதைக்கிற வேலையை இந்திய அரசு தொடர வேண்டாம் என வேண்டுகிறேன்" இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x