

நெற்றியில் குங்குமம் வைத்திருப்பவரைப் பார்த்தால் பயமாக இருக்கிறது எனக் கூறிய கர்நாடக முன்னாள் முதல்வரும் அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சித்தராமையாவை நடிகை காயத்ரி ரகுராம் விமர்சித்திருக்கிறார்.
முன்னதாக, நேற்று (செவ்வாய்க்கிழமை) கர்நாடகா மாநிலம் பதாமியில் ஏரி மறுசீரமைப்புப் பணியை தொடங்கி வைத்த சித்தரமையா அங்கிருந்த ஒப்பந்ததாரரைப் பார்த்து, "நெற்றியில் குங்குமம் வைத்திருக்கிறீர்களே வேலையை ஒழுங்காக முடித்துவிடுவீர்களா?! எனக்கு நெற்றியில் குங்குமம் வைத்தவர்களைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது. வேலையை குறித்த நேரத்தில் நல்லபடியாக முடிக்க வேண்டும். முடித்துவிடுவீர்களா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், குங்குமம் வைத்தவர்கள் என்றாலே பயம்தான்" என்றார்.
இந்த கருத்துக்கு பலரும் எதிர்வினையை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வரிசையில் நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், "கூட்டத்தில் ஒருவரை குங்குமம் வைத்திருந்ததற்காக விமர்சித்து சிரிக்கும் சித்தராமையா என்னமாதிரியான இந்து என எனக்குத் தெரியவில்லை.
இப்படியொரு விமர்சனம் வேறு எந்த ஒரு மதத்தினர் மீது முன்வைக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் தகுந்த பதிலடி கொடுத்திருப்பார்கள்.
கடவுள் நம்பிக்கை முன்னால் காங்கிரஸாவது பணபலமாவது" என பதிலடி கொடுத்திருக்கிறார்.