Published : 22 Mar 2019 01:24 PM
Last Updated : 22 Mar 2019 01:24 PM

திமுக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்?- மோடி தீவிரவாதத்தை அழித்தவர்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

தீவிரவாதத்தை அழித்து வலிமையான பிரதமராக உள்ள மோடி எங்கள் பிரதமர் வேட்பாளர், திமுக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என எடப்பாடி பழனிசாமி ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பினார்.

சேலம் மாவட்டம் கருமந்துரையில் முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்  சேலம் மாவட்டம், கருமந்துரை, புத்திரகவுண்டன்பாளையம் மற்றும் வழி நெடுகிலும் உள்ள கிராமங்களில் பொது மக்களைச் சந்தித்து, பிரச்சார வேனிலிருந்தபடி பொதுமக்களிடம் உறையாற்றினார்.

கள்ளக்குறிச்சி தொகுதி நாடாளுமன்ற தேமுதிக வேட்பாளார் சுதீஷ் மற்றும் சேலம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணன் ஆகியோரை ஆதரித்து பேசியதாவது:

“எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்ட மாபெரும் இயக்கம் தான் அதிமுக. அந்த இருபெரும் தலைவர்களும் ஏழை, எளிய மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார்கள். அவர்கள் செயல்படுத்திய திட்டங்களை அடிப்படையாக கொண்டுதான் இந்த அரசும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்த நாட்டிற்கு பாதுகாப்பு மிக முக்கியமானதாகும். ஒரு நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், அதற்கு திறமை மிக்க வலிமையான தலைவர் மிக அவசியம் அந்த தகுதியுடைய ஒரே தலைவர் நரேந்திர மோடி. அவர் பிரதமராக இருந்தால் தான் இந்தியா பல்வேறு நிலைகளில் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெறும்.

அண்மையில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளால், இந்திய ராணுவ வீரர்கள் மீது எதிர்பாராத தாக்குதலை நடத்தி சுமார் 45-க்கும் மேற்பட்ட வீரர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தார்கள். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உடனடியாக போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்து சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கு ஒரு பெருமையை பெற்றுத்தந்த ஒரு பிரதமர் தான் நரேந்திர மோடி.

அதேபோன்று நம் இந்திய நாட்டைச் சேர்ந்த ஒரு ராணுவ வீரர் பாகிஸ்தான் படையினரால் சிறைபிடிக்கப்பட்டார். அவரை எவ்வித சேதாரம் இல்லாமல், பத்திரமாக மீட்டு உலக அரங்கில் இந்தியாவில் வலிமையை எடுத்துக்காட்டியவர் பிரதமர் மோடி  நாட்டின் பாதுகாப்பினையும், வலிமையையும் பெற்று வாழ்வதற்கு இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றாக வேண்டும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

திமுக, அமைத்துள்ள கூட்டணியின் யார் பிரதமர் என்று முடிவு செய்யப்படவில்லை, ஆனால், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடியை முன்நிறுத்தி நாங்கள் வாக்கு கேட்கிறோம். ஆனால் அவர்கள் பிரதமர் யார் என்றே தெரியாமல் வாக்கு கேட்டு வருகிறார்கள்.

இந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல்காந்தி தான் என்று ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால் அதற்கு பிறகு பல்வேறு கட்சித்தலைவர்கள் மாநில முதலமைச்சர் அவர்கள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் தேர்தலுக்குப் பிறகு பிரதமர் யார் என்று முடிவு செய்யப்படும் என தெரிவித்திருக்கிறார். பச்சோந்தி என்று சொன்னால் அது ஸ்டாலினுக்கு மட்டுமே பொருத்தமானதாகும்.

திமுக 11 ஆண்டு காலம் மத்திய அரசில் அங்கம் வகித்து, ஆட்சி அதிகாரத்திலே இருந்தார்கள். அப்போழுது தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்காக ஏதேனும் குரல் கொடுத்தார்களா. மக்கள் பிரச்சனையை மத்திய அரசிடம் எடுத்துரைத்து தீர்த்து வைத்தார்களா? எதையுமே, அவர்கள் செய்யவில்லை.

ஆனால் தேர்தல் நேரத்தில் நாங்கள் தான் இதைச் செய்தோம், அதைச் செய்தோம் என்று பொதுமக்கள் மத்தியில் எடுத்துக்கூறி வாக்குகளைப் பெற நினைக்கிறார்கள். இது ஒருபோது தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடாது. தமிழ்நாட்டு மக்கள் எதையும், ஆராய்ந்து, சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்” இவ்வாறு பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x