சிவகங்கை தொகுதி வேட்பாளர் அறிவிக்காத பின்னணி: காங்கிரஸில் தொடரும் இழுபறி

சிவகங்கை தொகுதி வேட்பாளர் அறிவிக்காத பின்னணி: காங்கிரஸில் தொடரும் இழுபறி
Updated on
2 min read

சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரத்திற்கு வாய்ப்பில்லை என்பதால் தனது ஆதரவாளர் ஒருவருக்கு தொகுதியை தர வேண்டும் என சிதம்பரம் தரப்பு கோரிக்கை வைப்பதால் அந்த தொகுதி இழுபறியில் உள்ளதாக காங்கிரஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.

காங்கிரஸ் போட்டியிடும் 9 ஒன்பது தொகுதிகளில் வேட்பாளரை அறிவிப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. வேட்பாளராக தொகுதியை வாங்கி விட்டு பின்னர் மாற்று வேட்பாளர்கள் பலமானவர்கள் என்றவுடன் என்ன செய்வது என்ற சிந்தனையும், வெல்லும் தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டி அதிகமாக இருந்ததாலும், தொடர்ந்து காங்கிரஸில் குழப்பம் நீடித்து வந்தது.

சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவார் என்று அனைத்து தரப்பினரும் கூறிவந்தனர். இந்நிலையில் அனைத்து கட்சிகளும் வேட்பாளரை அறிவித்து விட்ட சூழ்நிலையில் திமுக கூட்டணியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தை தொடங்கி நிலையில் வேட்பாளரை அறிவிக்காமல் காங்கிரஸ் தரப்பில் இழுபறி நீடித்தது.

இந்நிலையில் நேற்று மாலை கூடிய காங்கிரஸ் மேலிட கூட்டத்தில் பல மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் உறுதிப்படுத்தப்பட்டது.அதில் தமிழகத்தில் ஒன்பது தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலும் எடுத்துக்கொள்ளப்பட்டது. திருவள்ளூரில் செல்வபெருந்தகையும் ஜெயக்குமாரும் போட்டியில் இருந்தனர் அங்கு ஜெயக்குமாருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

ஆரணியில் விஷ்ணு பிரசாத் என முடிவுசெய்து இதற்காக காங்கிரஸ் விதியை தளர்த்தி போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது.கரூரில் தம்பிதுரை எதிர்த்து ஜோதிமணி பலமான வேட்பாளர் இல்லை என்றாலும் வேறு வேட்பாளரை மாற்றும் யோசனைகள் வந்தபோதும் ஜோதிமணியே அங்கு அறிவிக்கப்பட்டார்.

கிருஷ்ணகிரியில் அதிமுகவின் பலமான வேட்பாளர் கே.பி. முனுசாமிக்கு எதிராக பலம்வாய்ந்த வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்கிற கருத்தை மீறி மீண்டும் டாக்டர்.செல்லக்குமார் அங்கு அறிவிக்கப்பட்டார்.விருதுநகரில் மாணிக் தாகூர் ஏற்கெனவே முடிவு செய்தபடி நிறுத்தப்படுகிறார்.

அதேபோன்று தேனியில் அதிமுகவில் ஓபிஎஸ் மகனும், டிடிவி முகாமில் தங்க தமிழ்ச்செல்வனும் நிறுத்தப்பட மூட்டு வலியை காரணம் காட்டி ஹாருண் ஒதுங்க அங்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரியில் ராபர்ட் புரூஸ் முதலில் எடுத்துக்கொள்ளப்பட்டாலும், கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணனை தோற்கடிக்கும் வலிமை பெற்றவர் வசந்தகுமார் என்பதால் எம்எல்ஏவாக இருக்கும் அவரை கன்னியாகுமரி தொகுதியில் நிறுத்துகிறது காங்கிரஸ்.

திருச்சியில் திருநாவுக்கரசர் நிற்பார் என்று கூறப்பட்ட அடிப்படையில் அவரையே அறிவித்துள்ளனர்.ஆனால் சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் நிற்பதில் சிக்கல் ஏற்பட்டது. அவர் மீது இருக்கும் வழக்கு காரணமாக அவர் நிற்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து அவரது மனைவிக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் காங்கிரஸ் மேலிடம் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.இதையடுத்து சிவகங்கை தொகுதியில் தங்கள் குடும்பத்தில் யாருக்கும் வாய்ப்பில்லை என்றால் தங்கள் ஆதரவாளருக்கு அந்த தொகுதியை வழங்க வேண்டும் என்று சிதம்பரம் தரப்பு உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

சிதம்பரம் தரப்பில் முன்னாள் எம்எல்ஏ காரைக்குடி சுந்தரம் அல்லது வேலுச்சாமி என இரண்டு பேரில் ஒருவரை அறிவிக்கவேண்டும் என காங்கிரஸ் மேலிடத்திடம் வலியுறுத்தி வருவதாக தெரிகிறது.

மறுபுறம் சுதர்சன நாச்சியப்பன் நீண்டகாலமாக சிவகங்கையில் பிரபலமான காங்கிரஸ் தலைவராக இருந்து வருகிறார், கார்த்தி சிதம்பரத்திற்கு வாய்ப்பு இல்லை என்றால் தனக்கு அந்த தொகுதியை வழங்க வேண்டும், மூத்த நிர்வாகிகள் நானும் ஒருவன் என்று அவர் கேட்டு வருகிறார்.

சிவகங்கையில் சுதர்சன நாச்சியப்பன் நிறுத்தப்பட்டால் அவர் சிறந்த வேட்பாளராக இருப்பார், அவர் வெல்வதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் உண்டு என காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் குழப்பத்தில் இருக்கும் காங்கிரஸ் தலைமை சிவகங்கை தொகுதியை மட்டும் தற்போது அறிவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in