Published : 13 Sep 2014 09:58 AM
Last Updated : 13 Sep 2014 09:58 AM

வாச்சாத்தி கலவரம்: பாதிக்கப்பட்ட 105 பேருக்கு கூடுதலாக ரூ.60 ஆயிரம் நிவாரணம்; கருணை அடிப்படையில் வழங்குவதாக ஜெயலலிதா அறிவிப்பு

வாச்சாத்தி கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 105 பேருக்கு கூடுதலாக ரூ.60 ஆயிரம் நிவாரணம் வழங்குவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

1992-ம் ஆண்டு, தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், வாச்சாத்தி கிராமத்தில் சந்தன மரங்கள் வெட்டப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் நடந்த சோதனையின் போது, அவ்வூர் மக்களில் சிலர் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டனர் என்பதன் அடிப்படையில், பாதிக்கப்பட்ட 407 நபர்களுக்கு 1 கோடியே 44 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, பாதிக்கப்பட்ட மக்களுக்காக தொகுப்பு வீடுகள், குடும்ப அட்டைகள், வீட்டு மின் இணைப்பு, தெரு விளக்கு, விவசாய மின் இணைப்பு, குடிநீர் மின் இணைப்பு, குடிசை மின் இணைப்பு, தொழில் மின் இணைப்பு ஆகியவையும் வழங்கப்பட்டன.

வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் சோதனைக் குழுவைத் தாக்கியதாக வனத்துறை அலுவலர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், இந்தச் சம்பவம் நடந்து ஏழு ஆண்டுகள் கழித்து, 1999-ம் ஆண்டு தருமபுரி காவல் துறையினரால் அரூர் நீதிமன்றத்தில் வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்த 105 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணை ஏதும் நடைபெறாமல் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு அரூர் நீதிமன்றத்தால் 15.11.2012 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட 77 நபர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணத் தொகையான 12 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை வழங்கிட நான் உத்தரவிட்டதை அடுத்து இதற்கான ஆணை வியாழக்கிழமை பிறப்பிக் கப்பட்டது.

வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்கள், தங்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அந்த வழக்கின் காரணமாக தாங்கள் இதுவரை பட்ட இன்னல்களை மனதில் கொண்டு தங்களுக்கு கருணை அடிப்படையில் மேலும் கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என்று என்னை இன்று (வெள்ளிக்கிழமை) நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். அவர்களுடைய கோரிக்கையின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட 105 நபர்களுக்கும் நிவாரணத் தொகையாக தலா ரூ. 60 ஆயிரம் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவை சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமையன்று சந்தித்த வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் கூடுதல் நிவாரணம் வழங்கக் கோரிக்கை விடுத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x