Published : 25 Mar 2019 04:31 PM
Last Updated : 25 Mar 2019 04:31 PM

ஷாலினி பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்; இல்லையேல் சட்ட நடவடிக்கை: நாம் தமிழர் கட்சி காட்டம்

தமிழ்ப் பெண்கள் குறித்துக் கீழ்த்தரமாகப் பதிவிட்ட ஷாலினி பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து நிற்கிறது. 20 தொகுதிகளில் கட்சியின் சார்பில் பெண்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். பெண்களுக்கு சம உரிமை என்ற வகையில் நாம் தமிழர் கட்சி முன்னுதாரணத்துடன் செயல்படுவதாக பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.

இதற்கிடையே ''இனிமையாகப் பேசும் ஆண்களால் பெண்கள் ஈர்க்கப்படுவது மனித இனத்துக்கே உரிய அவலம்'' என்று மனநல மருத்துவர் ஷாலினி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அத்துடன் பெண் வேட்பாளர்கள் அடங்கிய புகைப்படத்தையும் அதில் பகிர்ந்திருந்தார்.

அவரின் கருத்துக்குக் கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில், #ShameonyouShalini உள்ளிட்ட ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகின. இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியாகியுள்ளது.

அதில், ''பெண் ஊடகவியலாளர்களை இழிவுபடுத்திய எஸ்.வி.சேகருக்கு இருந்த வக்கிரப் பார்வைக்குச் சற்றும் சளைத்ததல்ல மருத்துவர் ஷாலினியின் அபத்தப் பதிவு. தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்திய (மனநல) மருத்துவர் ஷாலினி பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். தவறும் பட்சத்தில் சட்டரீதியாக இப்பிரச்சினையை கொண்டு செல்வோம். இதுபோன்ற கீழ்த்தரமான சிந்தனைகளை சகித்துக்கொள்ள முடியாது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x