Published : 27 Mar 2019 02:20 PM
Last Updated : 27 Mar 2019 02:20 PM

‘நாங்கள் கஸ்டம்ஸ் ஆஃபிசர்ஸ்’; எழும்பூர் ஷாப்பிங் மாலில் நூதனமுறையில் ரூ.27 லட்சம் பறித்த 6 பேருக்கு வலை

பணப்பரிமாற்ற நிறுவனத்தில் நாங்கள் கஸ்டம்ஸ் அலுவலர்கள் என்று கூறி நூதன முறையில் ஏமாற்றி பணம் பறித்துச் சென்ற 6 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் பிரின்ஸ் பிளாசா எனும் ஷாப்பிங் மால் உள்ளது. இங்கு புதுப்பேட்டை திருவேங்கடம் தெருவில் வசிக்கும் அமித்மீரான் (55) என்பவர் பணப்பரிமாற்றம் செய்யும் நிறுவனத்தை (Asha international Forex Shop) நடத்தி வருகிறார்.

வெளிநாட்டுப் பணத்தை இந்திய கரன்ஸியாக மாற்றுவது, இந்திய கரன்ஸியை வெளிநாட்டுப் பணமாக மாற்றித்தரும் அங்கீகாரம் பெற்ற நிறுவனம் அது. நேற்று மாலை அமித் மீரான் வெளியில் சென்றிருந்த நிலையில் நிறுவனத்தில் அவரது மகன்கள் காஜாமைதீன் (35) மற்றொரு மகன் நசீர் (35) மற்றும் பணியாட்கள் முகமது,பஷிர் ஆகியோர் இருந்துள்ளனர்.

அப்போது வெள்ளை நிற அரசு பொலீரோ ஜீப் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து அதிகாரத் தோரணையுடன் டிப்டாப்பாக இறங்கிய 5 பேர் தடதடவென்று நுழைந்து அனைவரது செல்போன்களை வாங்கி வைத்துக்கொண்டு நாங்கள் கஸ்டம்ஸுடன் இணைந்த தேர்தல் பறக்கும்படை என்று கூறி ஐடி கார்டுகளைக் காட்டியுள்ளனர்.

என்ன வேண்டும் என கேட்க அனுமதி இல்லாத பணத்தை மாற்றி வைத்துள்ளதாக தகவல் என்று கூறி சோதனையிடவேண்டும் என்று தெரிவித்துள்ளனர். பின்னர் அவர்கள் சோதனையில் ரூ.27 லட்சம் ரொக்கப் பணத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

இதற்கான ஆவணங்கள் எங்கே என கேட்டுள்ளனர். அப்பா வெளியில் போயிருக்கிறார் அவரிடம் டாக்குமெண்ட் உள்ளது என்று அவர்கள் கூற, அதெல்லாம் அலுவலகத்தில் வந்து ஆவணங்களைக் காட்டி பணத்தை வாங்கிச் செல்லுங்கள். நீங்கள் இருவரும் எங்களுடன் அலுவலகம் வந்து எழுதிக்கொடுத்துவிட்டுச் செல்லுங்கள் என்று கூறியுள்ளனர்.

பணம் ரூ. 27 லட்சத்தைப் பறிமுதல் செய்துகொண்டு, கண்காணிப்பு கேமரா பதிவான ஹார்ட் டிஸ்க்கையும் எடுத்துக்கொண்டு காஜாமைதீன், நசீர் இருவரையும் தாங்கள் வந்த பொலீரோ ஜீப்பில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர்.

பணத்தை அரசு கஜானாவில் கட்டினால் திரும்ப வாங்குவது கடினம் என்று கூறிய அவர்கள், நீங்கள் இருவரும் உடனடியாக உங்கள் தந்தையை அழைத்துக்கொண்டு கஸ்டம்ஸ் அலுவலகம் வாருங்கள் என்று தீவுத்திடல் அருகே இறக்கிவிட்டுச் சென்றனர்.

அதன் பின்னர் விசாரித்தபோது தாங்கள் ஒரு மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்டது தெரியவந்துள்ளது. உடனடியாக இதுகுறித்து அமித்மீரான் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் சம்பவ இடத்தில் சிசிடிவி கேமரா பதிவுகளை சேகரித்துள்ளனர்.

பணம் இருக்கும் விஷயத்தையும், நூதன முறையில் மோசடி நடத்த திட்டம்போட்டுக் கொடுத்தது அவர்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர் அல்லது ஊழியர்கள் யாருக்காவது தொடர்புண்டா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x