Last Updated : 30 Mar, 2019 08:46 AM

 

Published : 30 Mar 2019 08:46 AM
Last Updated : 30 Mar 2019 08:46 AM

7 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யாவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு: கஸ்தூரி நாயக்கன்புதூர் கிராம மக்கள் அறிவிப்பு

கோவை அருகே 7 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யாவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் என கஸ்தூரி நாயக்கன்புதூர் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

கோவை காந்திபுரத்தில் இருந்து மேட்டுப்பாளையம் சாலை வழியாக சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் சென்றால், துடியலூரை கடந்து பன்னிமடை அருகே கஸ்தூரி நாயக்கன்புதூருக்கு செல்லலாம். இங்கு ஏறத்தாழ 200 வீடுகள் இங்கு உள்ளன. கட்டிட வேலை, கூலி வேலை, வீட்டு வேலை, ஓட்டுநர் வேலைக்கு இங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் சென்று வருகின்றனர். இக்கிராமத்துக்குள் நுழைந்து சிறிது தூரம் சென்றால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொல்லப்பட்ட 7 வயது சிறுமியின் வீடு உள்ளது. ஓலைகளை வெளிப்புற சுவராக கொண்டு, ஓடுகள் வேயப்பட்ட கூரையைக் கொண்ட வீட்டில் பெற்றோருடன் மகிழ்ச்சியாக வசித்து வந்த அந்த சிறுமி, கடந்த 26-ம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த அதிர்ச்சி சம்பவத்தில் இருந்து மீளாமல் உள்ளனர், இந்த கிராம மக்கள்.

உயிரிழந்த சிறுமியின் தந்தை ‘இந்து தமிழ்’ நிருபரிடம் நேற்று கூறும் போது, ‘‘காதல் திருமணம் செய்த எங்களுக்கு முதலில் பிறந்த குழந்தை இறந்ததால், 2-வது பிறந்த இவருக்கு செல்லம் கொடுத்து வளர்த்தோம். நான் 8-வது படித்துள்ளேன். என் மனைவி 10-வது படித்துள்ளார். நாங்கள் சரியாக படிக்க முடியவில்லை. எனவே, எங்கள் குழந்தையை நன்றாக படிக்க வைக்க திட்டமிட்டோம். கடந்த ஆண்டு என் 7 வயது மகளை 1-ம் வகுப்பில் சேர்ந்தேன். நன்றாக படித்த அவளை பட்டப்படிப்பு படிக்க வைக்க திட்டமிட்டேன். எப்போதும் வீட்டருகே விளையாடிக் கொண்டு இருப்பாள். வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்ல மாட்டாள். அப்படி ஆசையாக வளர்த்த என் மகளை, கொன்று விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், அது திருப்திகரமாக இல்லை. நாங்கள் கேட்டால், குற்றவாளியை பிடிக்கும் வரை எங்களை தொந்தரவு செய்யாதீர்கள் என போலீஸார் கூறுகின்றனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்படாவிட்டால், சாலை மறியல், முற்றுகை போராட்டங்கள் நடத்துவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை,’’ என்றார்.

கஸ்தூரி நாயக்கன்புதூர் பொதுமக்கள் கூறியதாவது: மாயமான சிறுமியை அதிகாலை 4 மணி வரை தேடினோம். வீட்டருகே உள்ள சந்தில் இரவு தேடிய போது எதுவும் இல்லை. ஆனால், மறுநாள் அந்த சந்தில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. கஸ்தூரி நாயக்கன்புதூர் கிராமத்தின் நுழைவுவாயிலில் இருந்து, சடலம் கிடந்த இடத்துக்கு வர தென்னந்தோப்பை ஒட்டியுள்ள பாதை, குடியிருப்புக்கு செல்லும் 2 பாதைகள் என மொத்தம் 3 வழிகள் மட்டும் உள்ளன. இதில், ஒரு வழித்தடத்தில் உள்ள வீட்டில் திங்கள்கிழமை இரவு துக்க நிகழ்ச்சி நடந்ததால் மக்கள் கூட்டம் இருந்தது. எனவே, மற்ற இரண்டு வழிகளில் தான் குற்றவாளிகள் வந்து சடலத்தை போட்டுச் சென்றிருக்க வேண்டும். இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்படாவிட்டால், நாங்கள் மக்களவை தேர்தலை புறக்கணிப்போம். ரேஷன்கார்டுகளை ஆட்சியரிடம் ஒப்படைப்போம்,’’ என்றனர்.

கஸ்தூரி நாயக்கன்புதூரை சேர்ந்த சித்ரா கூறும் போது,‘‘எனக்கு 8-வது படிக்கும் மகள், 10-வது படிக்கும் மகன் உள்ளனர். நான் கூலி வேலைக்கு சென்று வந்தேன். இந்த சம்பவத்துக்கு பிறகு கடந்த 5 நாட்களாக நான் வேலைக்குச் செல்லவில்லை. பயத்தின் காரணமாக என் மகளை நானே பள்ளிக்கு அழைத்துச் சென்று, பின் வீட்டுக்கு அழைத்து வருகிறேன். குற்றவாளிகளை நாங்களாக கண்டுபிடித்து ஒப்படைக்க வேண்டும் என போலீஸார் கூறுகின்றனர். போலீஸார் மெத்தனமாக செயல்படாமல், உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்,’’ என்றார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x