Published : 09 Mar 2019 03:24 PM
Last Updated : 09 Mar 2019 03:24 PM

மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் இந்தி பெயரிலேயே செயல்படுத்துவது மறைமுக இந்தி திணிப்பு: மார்க்சிஸ்ட் கண்டனம்

மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் இந்தி மொழியிலேயே  செயல்படுத்துவது மறைமுக இந்தி திணிப்பு நடவடிக்கை என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக கே.பாலகிருஷ்ணன் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "மத்திய அரசு மூலம் இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்களின் பெயர்கள், அவற்றின் கொள்கை விளக்கங்கள் ஆகியவை அரசியல் அமைப்புச் சட்டத்தின் அங்கீகாரம் பெற்ற இந்திய மொழிகளில் மக்களிடம் எடுத்துச் செல்வதன் மூலமே இத்திட்டங்கள் அவர்களால் புரிந்து கொள்ளப்பட்டு அவை வெற்றி பெற வழிவகுக்கும். ஆனால் 2014-ம் ஆண்டில் பாஜக மத்திய அரசில் பொறுப்பேற்ற பிறகு அறிவிக்கப்பட்ட அனைத்துத் திட்டங்களும் இந்தியில் மட்டுமே பெயரிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களுக்கான விளம்பரங்கள், அரசின் செய்திக் குறிப்புகள் ஆகியவை இந்திப் பெயர்களையே தாங்கி வருகின்றன.

உதாரணமாக, பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா, (பிரதமரின் மக்கள் நிதி திட்டம்), பிரதான் மந்திரி சுகன்யா சம்ரிதி யோஜனா (செல்வ மகள் திட்டம்), பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (முத்ரா கடன் திட்டம்), பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (விபத்து காப்பீட்டுத் திட்டம்)  பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா (பயிர் காப்பீட்டுத்திட்டம்), பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஆசாதி யோஜனா (மலிவு விலை மருந்து கடைகள் திட்டம்), ஸ்வச் பாரத் (தூய்மை இந்தியா) போன்ற பல திட்டங்களும் தமிழ்நாட்டில் இந்தி பெயரிலியே செயல்படுத்தப்படுகின்றன.

சமீபத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான பிரதம மந்திரியின் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கிய நிகழ்ச்சியில் அடையாள அட்டையின் விபரங்கள் அனைத்தும் இந்தியில் எழுதப்பட்டுள்ளது. இவ்விழாவில் தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், நிலோபர் கபில்ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

சமீபத்தில் கூட சென்னை-நெல்லை இடையிலான ரயில் சேவைக்கு 'அந்த்யோதயா' என்றும், மதுரை-சென்னை இடையிலான அதிவேக ரயில் சேவைக்கு 'தேஜஸ்' என்றும் இந்தியில் தான் பெயர் சூட்டியுள்ளனர். இதுவரை வைகை, பல்லவன், பாண்டியன், சோழன், சேரன் என்று பெயர் சூட்டப்பட்டு வந்த வழக்கம் உள்நோக்கத்துடன் திட்டமிட்டு திசை மாற்றப்படுகிறது. மத்திய அரசின் இத்தகையப் போக்கு தமிழகத்தில் கொல்லைப்புற வழியாக இந்தி திணிப்பு நடவடிக்கை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

ஏற்கெனவே மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் ஆகிய அனைத்து மாநில மக்களும் அணுக வேண்டிய அமைப்புகளில் இந்தி மொழியை வலுக்கட்டாயமாக பாஜக அரசு திணித்து வருகிறது.

இந்தி திணிப்பு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டிய தமிழக அரசு மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு துணைபோய் வருவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

மத்திய அரசின் திட்டங்கள், அவற்றின் கொள்கை விளக்கங்கள் ஆகிய அனைத்துமே தமிழ்நாட்டில் தமிழ்மொழியில் பெயரிடப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. தமிழ்மொழியை புறந்தள்ளி இந்தியை திணிக்கும் மத்திய பாஜக அரசின் முயற்சிக்கு தமிழக மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்" என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x