

அமெரிக்க அரசு மனித உரிமை பாதுகாப்புத்துறை ஆண்டறிக்கையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் வெளிவராமல் ஊடகங்கள் தடுக்கப்பட்டது குறித்து அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க அமைச்சகமே குறிப்பிட்டு கண்டிக்கும் சம்பவங்களில் தூத்துக்குடி சம்பவமும் எதிரொலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் தாண்டி இந்தியா முழுதும் எதிரொலித்தது. தமிழக அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் ஆண்டுதோறும் அமெரிக்க மனித உரிமை பாதுகாப்புத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ரோஹிங்கியா இஸ்லாமியர், வங்கதேச அகதிகள் விவகாரத்துடன் தூத்துக்குடி துப்பாக்கிச் சம்பவத்தையும் குறிப்பிட்டுள்ளது.
கடந்த வாரம் உலக நாடுகளின் மனித உரிமை நிலவரங்கள் குறித்த அறிக்கைகளை அமெரிக்க அமைச்சர் மைக் பாம்பியோ வெளியிட்டார். அவர் கூறும்போது, “நம் நண்பர்கள் கூட, நம் கூட்டாளிகளும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றனர்” என்று அறிக்கையை வெளியிட்டு கருத்து தெரிவித்தார்.
“நாங்கள் இந்த அறிக்கைகளையும் சம வலிமையுடன் ஆவணப்படுத்துகிறோம். மனித உரிமைகள் சவால்களையும் நாங்கள் அடையாளப்படுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். ஆகவே அமெரிக்கச் செல்வாக்கையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி ஒவ்வொரு நாடும் சீரான முறையில் மனித உரிமை நடைமுறைகள் வழியில் நடக்குமாறு செய்வோம்.” என்றார்.
தூத்துக்குடி சம்பவம்:
‘சரிந்து வரும் பத்திரிகை சுதந்திரம்’
அதே போல் இந்த அறிக்கையில் பத்திரிகை சுதந்திரம் பற்றி கூறும்போது, இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் சரிந்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளது.
“பத்திரிகையாளர்கள், என்.ஜி.ஓ.க்கள் தரப்பிலிருந்து, உள்ளூர் மற்றும் தேசிய மட்டத்தில் அரசு அதிகாரிகள் விமர்சன ஊடகங்களின் குரல்களை அடக்கி ஒடுக்கி வருவதாகப் புகார் எழுப்பியுள்ளனர்.
அதாவது விமர்சன ஊடகங்கள் பல்வேறு விதங்களில் அச்சுறுத்தவும் படுகின்றன. இந்த அச்சுறுத்தல்கள் உடல் ரீதியாகவும் நிகழ்கிறது. அவர்களின் ஸ்பான்சர்களைக் குறிவைப்பது, அற்பத்தனமான வழக்குகளைப் போடுவது என்று விமர்சனங்கள் ஒடுக்கப்படுகின்றன” என்று இந்த அமெரிக்க அரசுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு உதாரணமாக ஆதார் திட்டத்தை விமர்சித்து கட்டுரை வெளியிட்ட ட்ரைபூன் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் ஹரீஷ் காரே ராஜினாமா செய்த விவகாரத்தைக் குறிப்பிட்டதோடு, தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிரான போராட்டங்கள் குறித்த நேரலை தொலைக்காட்சி ஒளிபரப்புகளை தமிழக அரசின் கேபிள் நெட்வொர்க் தடுத்ததையும் இந்த அறிக்கைக் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்த அறிக்கை, தவறான நடத்தைகளுக்கு அரசு தரப்பிலிருந்து எந்த ஒரு பொறுப்பும் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, “தனிப்பட்ட வழக்குகளில் விசாரணைகள் நடைபெற்றன. ஆனால் அமலாக்கத்தில் குறைபாடு இருந்து வருகிறது. என்றும் குறிப்பிட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நடந்துவரும் நேரத்தில் தூத்துக்குடி சம்பவம் குறித்து அமெரிக்க மனித உரிமைத்துறை கருத்து தெரிவித்துள்ளது ஆங்கில ஊடகங்கள் உள்ளிட்ட தேசிய ஊடகங்களில் வெளியாகி உள்ளது.