

மதுரையில் சகோதரர்கள் உள்பட மூவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மூவர் நாகர்கோவில் அருகே வாகன சோதனையில் பிடிபட்டனர்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் மீனாம்பிகை நகர் 8-வது வீதியை சேர்ந்தவர் குண்டுமலை. இவரது மகன்கள் கருப்பு ராஜா (19), பாம்பு நாகராஜ் (18), இவர்களது நண்பர் மதுரை கோவலன் தெருவைச் சேர்ந்த கார்த்திக் (22) ஆகியோர் வெள்ளிக்கிழமை மதியம் கருப்பு ராஜா வீட்டில் இருந்தனர். அப்போது அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் மூவரையும் வெட்டிக் கொலை செய்தது. ஜெய்ஹிந்த்புரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் கன்னியாகுமரிக்கு தப்பிச் செல்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில் போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
நேற்று மாலை 3 மணி அளவில் ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடி வழியே சொகுசு கார் ஒன்று வந்தது. அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நெடுஞ்சாலைத் துறை ரோந்து போலீஸார் சந்தேகத்தின் பேரில் காரை நிறுத்தி விசாரித்தனர். அதில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் போலீஸார் சந்தேகம் அடைந்தனர்.
காரில் இருந்த மதுரை ஜெய்ஹிந்த்புரம் 5-வது தெருவைச் சேர்ந்த திருப்பதி (39), அதே பகுதியைச் சேர்ந்த செல்லப்பன் மகன்கள் மகேஸ்வரன் (29), பாண்டி (22), காரை ஓட்டி வந்த திருநெல்வேலி மாவட்டம் பணகுடி சிவகாமிபுரத்தை சேர்ந்த ராமையா (38) ஆகிய நால்வரையும், ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது மதுரையில் சகோதரர்கள் உள்பட 3 பேர் கொலை வழக்கில் மதுரையைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இக்கொலை வழக்கை விசாரிக்கும் தனிப்படையை சேர்ந்த தல்லாக்குளம் இன்ஸ்பெக்டர் மன்னன் தலைமையிலான போலீஸார், ஆரல்வாய்மொழி வந்து 4 பேரையும் மதுரைக்கு அழைத்துச் சென்றனர்.