Published : 08 Sep 2014 11:45 AM
Last Updated : 08 Sep 2014 11:45 AM

இடியும் நிலையில் பக்கிங்காம் கால்வாய் பாலம்: அச்சத்தில் மீனவ கிராமங்கள் - விடிவுகாலம் எப்போது?

செய்யூர் அடுத்த பரமங்கேணி குப்பம் பகுதியில் பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே அமைந்துள்ள பாலம் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளதால், அதை பயன்படுத்தும் 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் அச்சத்துடன் மேம்பாலத்தை கடந்து செல்லும் நிலை உள்ளது. அப்பகுதியில் புதிய பாலம் அமைக்க வேண்டும் என மீனவ கிராம மக்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் லத்தூர் ஒன்றியத்தில், பரமங்கேணிகுப்பம் கிராமத்தையும் கிழக்கு கடற்கரை சாலையையும் இணைக்கும் வழியில், பக்கிங்காம் கால்வாய் குறுக்கிடுகிறது. இந்த கால்வாயை கடந்து செல்வதற்காக அதன் குறுக்கே 200 அடி நீளத்தில் பாலம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த பாலத்தை பரமங்கேணி குப்பம், நடுவங்கரணை குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது இந்த மேம்பாலத்தை தாங்கி பிடிக்கும் தூண்களில் உள்ள சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து, கம்பிகள் வெளியே தெரியும் அபாய நிலையில் பாலம் உள்ளது. சில தூண்கள் இடிந்தும் உள்ளன. அதனால், இந்த மேம்பாலத்தின் மூலம் கிழக்கு கடற்கரை பகுதிக்கு சென்று வரும் மீனவ கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள், பெரும் அச்சத்துடனேயே மேம்பாலத்தை கடந்து செல்கின்றனர். பாலம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், பரமங்கேணி குப்பம் பகுதிக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்தும் நிறுத்தப்பட்டுள்ளது

இதனால் பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே புதிய பாலம் அமைக்க வேண்டும் என 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, பரமங்கேணி குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் கூறியதாவது: ‘5 ஆண்டுகளுக்கும் மேலாக பாலம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும், மழைக்காலங்களில் கால்வாயில் அதிகளவில் தண்ணீர் வருவதால், மேம்பாலத்தின் மீது செல்ல அச்சமாக உள்ளது. இதனால் 5 கி.மீ. சுற்றிக்கொண்டு கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்கிறோம்.

அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்வதற்கு முன்பாகவே கால்வாயின் குறுக்கே புதிய பாலம் அமைத்துத் தருமாறு, செய்யூர் எம்.எல்.ஏ மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் உள்ளிட்டோரிடம் மனு அளித்தோம். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை’ என்றனர்.

இது குறித்து, நடுவங்கரணை குப்பத்தைச் சேர்ந்த முருகதாஸ் என்பவர் கூறியதாவது: ‘பாலம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், எங்கள் பகுதிக்கு அரசு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வீடு கட்டுவதற்கு தேவையான கட்டுமான பொருட்களை கனரக வாகனங்களின் மொத்தமாக கொண்டு செல்ல முடியாத நிலையில் உள்ளோம். மேம்பாலத்தின் நிலை குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல முறை மனு அளித்துள்ளோம். இதனால் எங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

இது குறித்து, ஆரணி ஆறு கீழ் வடிநில கோட்ட செயற்பொறியாளர் செந்திலிடம் கேட்டபோது: ‘பரமங்கேணி குப்பம் கிராமப் பகுதியில் சேதமடைந்த நிலையில் உள்ள மேம்பாலத்திற்கு பதிலாக, புதிய பாலம் அமைக்க ரூ.4 கோடி அளவில் திட்டமதிப்பீடு செய்து, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு பரிசீலனையில் உள்ளது. ஒப்புதல் கிடைத்த உடன் பணிகள் தொடங்கப்படும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x