Published : 18 Mar 2019 10:22 AM
Last Updated : 18 Mar 2019 10:22 AM

பாலியல் கொடுமைக்கு எதிராக விழிப்புணர்வு!- கோவையின் வித்தியாச வழக்கறிஞர் ராஜா ஷெரீப்

தப்பா நடந்துக்க முயன்றா பயப்படாதீங்க,  எதிர்த்துப் போராடுங்க, உங்களை பலாத்காரம் செய்ய வந்தவங்களை நீங்க தாக்கும்போது, எதிர்பாராதவிதமாக அவங்க மரணமடைஞ்சாகூட உங்களுக்கு சட்டப்படி தண்டனை கிடையாது. அதேமாதிரி, பாதிக்கப்பட்டா பயந்து தவறான முடிவு எடுக்காதீங்க. சம்பந்தப்பட்டவங்களுக்கு தண்டனை  வாங்கிக் கொடுங்க” என்றெல்லாம் கடந்த 15 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி மாணவிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் கோவையைச் சேரந்த வழக்கறிஞர் ராஜா ஷெரீப். இவரிடம் உள்ள சேமிப்புகளைப் பார்த்தால் `ஆவணப் புதையல்’ என்றே சொல்லலாம். ஆயிரக்கணக்கான ஆவணங்களை சேர்த்துவைத்துள்ளார் இந்த வித்தியாசமான வழக்கறிஞர்.

கோவை உக்கடம் பைபாஸ் சாலையில் ஜே.கே.கார்டன் பகுதியில் உள்ள இவரது வீட்டுக்குச் சென்றபோது `இந்து தமிழ்’ நாளிதழில் வந்த முக்கியமான கட்டுரைகளை எல்லாம் சார்ட் அட்டையில் ஒட்டி, பைண்டு செய்து, பண்டல் பண்டலாக வைத்து, அதிலிருந்து சில குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்தார். அவரிடம் பேசினோம்.

“பெற்றோர் அனீபா-ஹாஜ்ராமா. அப்பா காய்கறி வியாபாரி. 10-ம் வகுப்பு வரை கோட்டை மண்பவுல் உலூம் பள்ளி,  11, 12-ம் வகுப்பு வெரைட்டி ஹால் மாநகராட்சிப் பள்ளியில படிச்சிட்டு, கோவை அரசு கலைக் கல்லூரியில  பி.ஏ., மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில்., பெங்களூருவில் பி.எல். படிச்சேன்.

மாட்டு வண்டியில பிரச்சாரம்!

கோவை அரசுக் கல்லூரியில படிக்கும்போது, கல்லூரி மாணவர் மன்றச் செயலர் பதவிக்குப் போட்டியிட்டேன். அப்ப, மாட்டு வண்டியிலபோய் பிரச்சாரம் செஞ்சேன். ஆயிரக்கணக்குல செலவு செஞ்சவங்களைக் காட்டிலும், 50 ரூபாய் செலவு செஞ்ச நான், நிறைய வாக்குகள் வித்தியாசத்துல வெற்றி பெற்றேன். பாரம்பரியமான அந்தக் கல்லூரியில மகளிர் மன்றத்தை தொடங்கினேன். கல்லூரி முடிஞ்சி வந்தப்ப, ஏதாவது சாதிக்கணும், வித்தியாசமா செய்யனும்னு யோசிச்சேன்.

1993-ல இன்லேண்டு லெட்டர்ல ஒரு லட்சம் முறை ராஜீவ் காந்தி பெயரை எழுதினேன். சோனியா காந்தி நேரிலேயே கூப்பிட்டுப் பாராட்டினாங்க. பனை ஓலையில 1330 திருக்குறள் எழுதினப்ப, குடியரசுத் தலைவராக இருந்த அப்துல்கலாம் கோவை வந்தப்ப, என்னைய கூப்பிட்டுப் பாராட்டினாரு. சட்டப் புத்தகம் வடிவுல, பனை ஓலையில திருக்குறள் எழுதி வெளியிட்டேன். அப்ப கவர்னரா இருந்த பர்னாலா கூப்பிட்டு, ரூ.10 ஆயிரம் பரிசு கொடுத்தாரு.

8 அடி உயரம், 4 அடி அகலம் கொண்ட அட்டையில, 639 பக்கத்துக்கு திருக்குரான் எழுதினேன். அதோட மொத்த எடை 225 கிலோ. இதே அளவுல, 125 கிலோ எடையில மிகப் பெரிய திருக்குறள் நூலை வெளியிட்டேன். அதேபோல, 4 செ.மீ. அளவுக்கு மிகச் சிறிய திருக்குறள் நூலும் எழுதினேன். மாணவர்கள்கிட்ட திருக்குறள் கருத்துகளை பரப்பும் வகையில், திருக்குறள் பரமபத விளையாட்டை உருவாக்கினேன். நல்ல பழக்கங்கள் ஏணியில் ஏற்றும், கெட்ட பழக்கங்கள் பாம்பாய் கொத்தும் அப்படினு உணர்த்தினேன். ஏறத்தாழ 6000 பள்ளிக் குழந்தைகளுக்கு இதை இலவசமாக கொடுத்தேன்.

வழக்கமாக எழுத்துகளை இடமிருந்து வலமாக எழுதுவோம். ஆனால், வடமிருந்து இடமாக திருக்குறள் எழுதி, `கண்ணாடிப் பார்வையில் திருக்குறள்` என்ற நூலாக வெளியிட்டேன். அந்தப் புத்தகத்துடன்  ஒரு கண்ணாடியும் இருக்கும். வித்தியாசமான இந்த நூல், அரசு நூலகங்களில் இடம் பெற்றது. இதேபோல, இடது கை, வலது கை, இடது புறம், வலதுபுறம், தலைகீழாக என 6 வடிவங்களில் திருக்குறளை எழுதியுள்ளேன்” என்ற ராஜா ஷெரீப்பிடம், “பழங்கால கடிதமெல்லாம் சேகரித்து வைத்திருக்கிறீர்களாமே?” என்று கேட்டோம்.

ரேடியோவுக்கு லைசென்ஸ்!

“ராஜாராஜ சோழன், அக்பர், ஆங்கிலேயர்  வரலாறெல்லாம் தெரிஞ்சி வெச்சிருக்கோம். ஆனா, எத்தனை பேருக்கு நம்ம குடும்பத்தோட வரலாறு தெரியும்? எங்கப்பா அவரோட கல்யாண பத்திரிகை, காய்கறி மார்க்கெட் அட்டைனு நிறைய சேமிச்சி வெச்சிருப்பாரு. இதைப்பார்த்து, சின்ன வயசுல இருந்தே எல்லாத்தையும் ஆவணப்படுத்தத் தொடங்கினேன். கிட்டத்தட்ட 90 வருஷத்துக்கு கடிதங்கள் எங்கிட்ட இருக்கு. அந்தக் காலத்துல வீட்டுல ரேடியோ, டிவி வெச்சிக்க லைசன்ஸ் இருக்கணும். அதிகாரிங்க வீடு வீடா வந்து செக் பண்ணுவாங்க. லைசன்ஸ் இல்லைனா, ரேடியோவை பறிமுதல் செய்வாங்க. இப்பவும் அந்த லைசன்ஸ் வைச்சிருக்கேன்.

கடந்த 40 வருஷமாக எனக்கு வந்த கடிதங்கள், வாழ்த்து அட்டைகளை சேகரிச்சி வெச்சிருக்கேன். மாணவர்கள்கிட்ட கடிதம் எழுதுவதோட முக்கியத்துவம், அழகாக எழுதுவதோட முக்கியத்துவம் தொடர்பாக வகுப்புகளை நடத்தி வர்றேன்” என்றார். “இப்போது பாலியல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நீங்கள் பல ஆண்டுகளாகவே விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறீர்களாமே?” என்றோம். “கடந்த 15 வருஷமா, பள்ளி, கல்லூரி மாணவிகள் கிட்ட, பாலியல் வன்கொடுமையில இருந்து பாதுகாத்துக்கறது தொடர்பாக பேசிக்கிட்டிருக்கேன். குட் டச், பேட் டச், குடும்பத்துல இருக்கறவங்க பாலியல் தொந்தரவு கொடுத்தா என்ன செய்யறது, வெளியில இருக்கறவங்க தொந்தரவு கொடுத்தா யார் கிட்ட புகார் சொல்றதுனு நிறைய விஷயங்களை ஆயிரக்கணக்கான பள்ளி,கல்லூரி மாணவிகள்கிட்ட கொண்டுபோயிருக்கேன். பொதுவாகவே, யாராவது தப்பா நடந்துக்கிட்டா பயப்படாம, எதிர்த்துப் போராடுங்க. அவங்களை தாக்குங்க. எதிர்பாராத

விதமாக அவங்க இறந்தாக்கூட, உங்களுக்கு சட்டப்படி தண்டனை கிடைக்காதுனு எல்லாம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வர்றேன். குன்றக்குடி அடிகளார், சுகி.சிவம், நடிகர் விசுவோட நிகழ்ச்சிகள்ல பேசியிருக்கேன். நுகர்வோர் விழிப்புணர்வுக் கூட்டங்கள்லயும் பேசியிருக்கேன். என்னோட செயல்பாடுகள் தொடர்பாக மனைவி யாஸ்மினுக்கு ஆரம்பத்துல கொஞ்சம் தயக்கம் இருந்தது. மக்களுக்கு கிடைக்கற நன்மை, எனக்கு கிடைத்த அங்கீகாரத்தை பாத்து அவங்க மாறினாங்க. ஒருகட்டத்துல அவங்க ரொம்ப ஒத்துழைப்புக் கொடுத்தாங்க. இதேபோல, என்னோட சீனியர் லாயர் எஸ்.ராஜேந்திரனும் ரொம்ப ஊக்குவிச்சாரு.

இன்னமும் நான் கடிதம் எழுதிக்கிட்டிருக்கேன். நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சியில, நுகர்வு கலாச்சாரம் நம்மை ரொம்ப சீரழிச்சிடுச்சு. எங்க அப்பா ஒரு கடிகாரத்தை 40 வருஷமா பயன்படுத்தினாரு. இப்ப வருஷத்துக்கு 4 செல்போன் மாத்தறோம். இந்த நிலை மாறனும். இதை பள்ளி, கல்லூரி மாணவர்கள்கிட்ட வலியுறுத்திப் பேசறேன். குடியிருப்போர் காலனி, முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லங்களுக்கும்போய் பல்வேறு தலைப்புகள்ல பேசறேன். நல்ல மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையில்லை. மதிப்புள்ள மனிதராக மாறனும்” என்றார் ராஜாஷெரீப் உறுதியுடன்.

கவர்னர் அப்பாயின்ட்மென்டை மறுத்த மாணவி!

வழக்கறிஞர் ராஜா ஷெரீபுக்கு 3 குழந்தைகள், மகன் ஆஷிக் முகமது பட்டதாரி. இளைய மகள் அகில் அகமது, பள்ளிக்குச் செல்கிறார். மூத்த மகள் அனிஸ் பாத்திமா, எல்.கே.ஜி. முதல் இதுவரை ஒருநாள் கூட விடுப்பே எடுத்ததில்லை. “இப்ப நான் நிர்மலா மகளிர் கல்லூரியில பி.ஏ. ஆங்கில இலக்கியம் இறுதியாண்டு படிக்கிறேன். எல்.கே.ஜி. முதல் இதுவரை, கடந்த 17 ஆண்டுகள்ல அரை நாள்கூட லீவு எடுத்ததில்லை. சந்தோஷ, துக்க நிகழ்ச்சிகள் விடுமுறை நாட்கள்ல இருந்தா மட்டும்தான் கலந்துக்குவேன். நான் பள்ளிக்கூடம் படிக்கும்போது தமிழக ஆளுநரா இருந்த பர்னாலா, என்னையப் பாராட்டுவதற்காக 3 முறை அப்பாயின்ட்மென்ட் கொடுத்தாரு. ஆனா, சென்னை, உதகையில இருக்கற ஆளுநர் மாளிகைக்குப் போகனுமுன்னா லீடு எடுக்க வேண்டிய சூழல். அதனால், நான் போகலை. கடைசியா, கோயம்புத்தூர் அரசு விருந்தினர் மாளிகையில அவரு இருந்தப்ப, பள்ளிக் கூடம் முடிஞ்சவாட்டி, மாலை 5 மணிக்குமேல போய் அவரைப் பார்த்து, வாழ்த்து பெற்றேன்” என்றார் அனிஸ் பாத்திமா பெருமிதத்துடன்.

படங்கள்: ஜெ.மனோகரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x