Published : 11 Mar 2019 01:11 PM
Last Updated : 11 Mar 2019 01:11 PM

மதுரையில் வாக்களிக்கும் நேரத்தை அதிகப்படுத்த கோரிக்கை; மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

மதுரையில், சித்திரைத் திருவிழாவையொட்டி, தேர்தல் நாளான 18ம் தேதி அன்று வாக்களிக்கும் நேரத்தை அதிகப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல், வருகிற ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் நடைபெறுகிறது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் 18 தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தலும் நடக்க உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெறும் அதேநாளில், மதுரையில் சித்திரைத் திருவிழா, லட்சக்கணக்கான பக்தர்கள் சூழ, நடைபெறுகிறது. மீனாட்சி திருக்கல்யாணம், மீனாட்சி பட்டாபிஷேகம், வீதியுலா, தேரோட்டம், அழகருக்கு எதிர்சேவை, வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி என 19ம் தேதி வரை விழாக்கள் நடைபெறும்.

இந்தச் சூழலில், மதுரையில் சித்திரைத் திருவிழா குறித்த விவரங்களை இன்று மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பார்த்தசாரதி என்பவர், மதுரையில் வேறொரு நாளில் தேர்தலை நடத்தவேண்டும் என மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை, நாளை செவ்வாய்க்கிழமை எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான நடராஜன், அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள், காவல்துறையினர் முதலானோரிடம் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சித் தலைவர் நடராஜன், செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடனும் காவல்துறை அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தப்பட்டிருக்கிறது. மதுரையில் திருவிழாவையொட்டி எப்போது உள்ளூர் விடுமுறை என தேர்தல் ஆணையம் கேட்டது. ஏப்ரல் 19ம் தேதி உள்ளூர் விடுமுறை எனச் சொல்லப்பட்டது.

வாக்குப்பதிவு நாளான 18ம் தேதி அன்று மதுரையில் தேரோட்டம் நடைபெறுகிறது. அன்றைய தினம் வழக்கம்போல், மதியம் 12 மணிக்கு தேரோட்ட விழா முடிந்துவிடும். எனவே, வாக்களிக்கும் நேரத்தை நீட்டிக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நாளின் போது, மாலை 6 மணிக்கு வாக்களிக்க வரிசையில் நிற்பவர்களுக்கு, எவ்வளவு நேரமானாலும் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படும். இதற்கான நேர நீட்டிப்பு குறித்து தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

இவ்வாறு மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நடராஜன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x