Published : 12 Mar 2019 02:52 PM
Last Updated : 12 Mar 2019 02:52 PM

பொள்ளாச்சி சம்பவம்: அரசியல்வாதிகளுக்கு தொடர்பில்லை என எஸ்பி மறுப்பு தெரிவித்திருப்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது: இரா.முத்தரசன்

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில், அரசியல்வாதிகளுக்குத் தொடர்பில்லை என்று காவல்துறை கண்காணிப்பாளர்  அவசர அவசாரமாக மறுப்பு தெரிவித்திருப்பது மில்லியன் டாலர் கேள்விகளை எழுப்பியுள்ளது என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இரா.முத்தரசன் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில், செயல்பட்டு வரும் சமூக விரோதக் கும்பல் கடந்த 6, 7 ஆண்டுகளாக பள்ளி மாணவி முதல் குடும்பப் பெண்கள் வரை வஞ்சகமாக ஏமாற்றிப் பணம் பறிப்பது, பாலியல் வன்முறைக்கு ஆளாக்குவது போன்று கொடுங்குற்றச் செயலில் ஈடுபட்டு வருகிறது. இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி ஒருவர் அண்மையில் பொள்ளாச்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் விளைவாக சமூக விரோதக் கும்பலின் சட்டவிரோதச் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பெண்களுக்கு நேர்ந்துள்ள வன்கொடுமையை அறியும் போது சட்ட ஒழுங்கு நிர்வாகம் செத்துவிட்டதா? என்ற கேள்வி எழுகிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை ஆரம்பத்தில் அலட்சியப்படுத்திய காவல்துறை, பின்னர் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்து சிலரைக் கைது செய்துள்ளது.

இந்த சமூக விரோத கும்பலின் செயலுக்கு அரசியல் அதிகாரத்தில்  உள்ளோர் சிலர் ஆதரவாக தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்துவதாக பொதுமக்களிடம் வலுவான சந்தேகம் நிலவுகிறது. இது குறித்து தீர விசாரித்து தெளிவுபடுத்த வேண்டிய காவல்துறை கண்காணிப்பாளர்  இந்தக் குற்றச் சம்பவத்தில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பில்லை என்று அவசர அவசரமாக மறுப்பு தெரிவித்திருப்பது மில்லியன் டாலர் கேள்விகளை எழுப்பியுள்ளது.

அதிமுக ஆட்சியில் குற்ற வழக்கில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் பாதுகாக்கப்படுவதும் அவர்களது பணிக்காலம் நீடிக்கப்படுவதும் நேர்மையான அதிகாரிகள் புறக்கணிக்கப்படுவதும், பழிவாங்கப்படுவதும் குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்கு காரணமாகும் என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது.

குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடாமல் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்" என, இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x