முறையற்ற உறவுகள் அதிகரிக்க டிவி சீரியல்களும், திரைப்படங்களும்தான் காரணமா?- அரசுக்கு உயர் நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி

முறையற்ற உறவுகள் அதிகரிக்க டிவி சீரியல்களும், திரைப்படங்களும்தான் காரணமா?- அரசுக்கு உயர் நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி
Updated on
1 min read

பாலியல் பிரச்சினைகள் காரணமாக தம்பதியர் திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவுகளை வைத்துக் கொள்கிறார்களா? தவறான உறவுகள் அதிகரிக்க டிவி சீரியல்கள் தான் காரணமா? என சென்னை உயர் நீதிமன்றம் சந்தேகம் எழுப்பியுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு முறையற்ற உறவால் ஏற்பட்ட பிரச்சினையில் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைதான அஜித் குமார் என்பவர் தன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு, முறையற்ற தவறான உறவுகளால் நடைபெறும் குற்றங்களில் ஒருங்கிணைந்த ஆந்திரா முதலிடத்தில் இருப்பதாக வேதனை தெரிவித்தனர்.

மேலும், திருமணத்தைத் தாண்டிய உறவுகள் ஆபத்தான சமூகக் தீங்கு என கருத்து தெரிவித்த நீதிபதிகள், நாட்டில் தவறான முறையற்ற உறவுகள் அதிகரிப்பதற்கும் அதன் காரணமாக அதிகரிக்கும் குற்றங்கள் குறித்து மத்திய மாநில அரசுகளுக்கும் பல்வேறு கேள்விகள் எழுப்பினர்.

முறையற்ற உறவுகள் அதிகரிக்க டிவி சீரியல்களும், திரைப்படங்களும்தான் காரணமா? முறை தவறிய உறவுகளில் ஈடுபட்டுள்ளோர், கொலை மற்றும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடச் செய்யும் வகையில் டிவி சீரியல்கள், சினிமாக்களில் காட்சிகள் அமைக்கப்படுகின்றனவா?.

வாழ்க்கைத் துணையை ஒழித்துக்கட்ட கூலிப்படையினர் அமர்த்தப்படுகின்றனரா? பொருளாதார சுதந்திரம் காரணமாக கணவனோ, மனைவியோ திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவுகளை வைத்துக் கொள்கிறார்களா? பாலியல் பிரச்சினைகள் காரணமாக தம்பதியர் திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவுகளை வைத்துக் கொள்கிறார்களா? என கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக ஜூன் 21-ம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in