

சேலம் கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் கால்நடை துறையில் தொழில் முனைவோராக செயல்படும் இளைய தலைமுறைகளுக்கு முகநூல் (ஃபேஸ்புக்) மூலம் ஆடு வளர்ப்பு பயிற்சி அளிக்கும் புது முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில், கால்நடைத் துறையில் தொழில் முனைவோராக செயல்பட விரும்பும் இளைய தலைமுறையை ஊக்குவிக்கும் விதமாக சமூக வலைத்தளங்கள் மூலம் கால்நடை துறை சார்ந்த தொழில்நுட்பங்கள் மற்றும் தகவல்களை கொண்டு சேர்க்கும் புது முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இதற்காக முகநூல், ட்விட்டர், குகூள்பிளஸ், சிலைட்சேர் போன்ற சமூக வலைத்தளங்களை சோதனை அடிப்படையில் பயன்படுத்தி, கால்நடை விரிவாக்க கல்வி சேவையை அடுத்த பரிமாணத்துக்கு எடுத்துச் செல்லும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இளைஞர்கள் மத்தியில் பரவலாக பயன்பாட்டில் இருக்கும் முகநூலுக்கு முன்னுரிமை கொடுத்து தகவல் பரிமாற்றம் செய்யப்படுகிறது.
சமூக வலைத்தளங்கள் மூலம் கால்நடை ஆராய்ச்சி மையத்தில் நடக்கும் பயிற்சி பற்றிய தகவல்கள் மட்டுமல்லாமல் பல்கலைக்கழக தொழில்நுட்பங்கள், அறிவுரைகள், அறிவிப்புகள், சந்தை சார்ந்த தகவல்கள் மற்றும் வெற்றிக்கதைகள் ஆகியன இடம் பெற்று வருகிறது. அவ்வப்போது பயனீட்டாளர்கள் மத்தியில் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படுகிறது. இந்த முயற்சியால் இம் மையத்தின் செயற்பாட்டு எல்லை விரிவடைந்து வருகிறது.
இதன் அடுத்த கட்டமாக பயனீட்டாளர்களின் வேண்டுகோளை ஏற்று முகநூல் மூலமாக கடந்த 23-ம் தேதி அன்று ஆடு வளர்ப்பு பற்றி, இணைய தளம் வழியாக கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. இதில் சேலம் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் டாக்டர் முருகேசன், உதவி பேராசிரியர்கள் டாக்டர் திருநாவுக்கரசு, வீரசெல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர். கலந்துரையாடலில், ஆடுகளைத் தேர்வு செய்யும் முறை, இறைச்சிக்கான உகந்த இனங்கள், கொட்டகை அமைக்கும் முறை, தீவனப்புல் பயிரிடுதல், தீவனம் அளிக்கும் முறை, நோய் கட்டுப்பாட்டு முறை பற்றி பல்வேறு பகுதி மக்கள் கேட்டறிந்தனர்.
இந்த இணைய கலந்துரையாடல் இளைஞர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளதால், வரும் காலங்களிலும் இந்த இணைய கலந்துரையாடல் நிகழ்ச்சி விரிவுபடுத்தப்படும் என்று சு.முருகேசன் தெரிவித்துள்ளார். ஆர்வமுள்ள விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் முகநூல் >(https://www.facebook.com/kokkarakoo) முகவரியில் இணைந்து கொள்ளலாம்.