

தமிழகத்தில் பாஜக போட்டியிடும் 5 தொகுதிகளின் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்து பின்னர் பின் வாங்கினார் எச் ராஜா.
தமிழக அரசியலில் அதிரடிக்கு சொந்தக்காரர் எச்.ராஜா. உணர்ச்சி வசப்பட்டு பேசக்கூடியவர் என பெயரெடுத்தவர். அடிக்கடி ட்விட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு அதனால் விமர்சனங்களை சந்திக்கக்கூடியவர்.
தமிழக பாஜக கட்சியில் நிதானமாக பிற கட்சித்தலைவர்களை மரியாதையுடன் அழைக்கக்கூடிய பல தலைவர்கள் இருக்கின்றனர். எச்.ராஜா போன்றோர் வைக்கும் விமர்சனங்களையும் ரசிக்கக்கூடிய வரவேற்கக்கூடியவர்களும் உள்ளனர்.
பெரியார் சிலையை அகற்றுவோம் என அவர் ட்விட்டரில் பதிவிட்டது அவர் மீது புகார் அளிக்கும் அளவுக்கு சென்றது. அதேபோன்று நீதிமன்றத்தை விமர்சித்து பின்னர் வருத்தம் தெரிவித்த நிகழ்வும் நடந்தது உண்டு.
நேற்று அவர் ஒரு பேட்டி மூலம் மீண்டும் ஒரு பரபரப்பான சூழ்நிலையை பாஜகவுக்குள் உருவாக்கிவிட்டார். தேசிய தலைமைதான் வேட்பாளர்களை அறிவிப்பார்கள். அதனால்தான் அதிமுக திமுக கூட்டணியில் இதுவரை காங்கிரஸ், பாஜக வேட்பாளர்களை அறிவிப்பதில் தாமதமாகிறது.
பாஜக கோவை, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி தொகுதிகளில் அதிமுக கூட்டணியில் போட்டியிடுகிறது. வேட்பாளர் பட்டியலை இறுதிப்படுத்தி டெல்லிக்கு அனுப்பி விட்டேன் அவர்கள் அறிவிப்பார்கள் என தமிழிசை நேற்று பேட்டி அளித்திருந்தார்.
ஆனால் நேற்று காரைக்குடியில் செய்தியாளர் சந்திப்பில் எச்.ராஜா 5 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தார். இது செய்தியாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. “தமிழகத்தில் பாஜக சார்பில் 5 வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது. கன்னியாகுமரியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், தூத்துக்குடியில் தமிழிசையும், சிவகங்கையில் எச்.ராஜாவும், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணனும், ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரனும் அறிவிக்கப்பட்டுள்ளார்கள்” என அறிவித்தார்.
இது பாஜக தலைமையிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கெனவே ஊடகங்களில் யூகங்கள் அடிப்படையில் வேட்பாளர் குறித்து வெளியானதை இது உறுதிப்படுத்தியது. இந்நிலையில் இன்று மீண்டும் தனது அறிவிப்பிலிருந்து பின்வாங்கிய எச்.ராஜா, அது யூகங்கள் அடிப்படையில் சொன்னது, வேட்பாளர்களை அதிகாரபூர்வமாக டெல்லி மேலிடம்தான் அறிவிக்கும் என்று தெரிவித்தார்.