Published : 11 Mar 2019 10:18 PM
Last Updated : 11 Mar 2019 10:18 PM

காங்கிரஸ் மீண்டும் மீண்டும் இழுபறி: திருச்சி உள்ளிட்ட 2 தொகுதிகளால் மீண்டும் சிக்கல்?

திருச்சி உள்ளிட்ட 2 தொகுதிகளை திடீரென திமுக கேட்பதால், மீண்டும் மீண்டும் காங்கிரஸ் உடனான பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளதாக திமுக வட்டார தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தொகுதிகளை இறுதிப்படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தில் 9 இடங்களில் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இழுபறி நீடித்து வரும் நிலையில் நேற்று இறுதியாக 9 தொகுதிகளை காங்கிரஸ் பட்டியலிட்டுக் கொடுக்க அதற்கு ஓரளவு சம்மதத்தை திமுக தெரிவித்ததாக கூறப்பட்டது.

தாங்கள் கொடுத்துள்ள 9 தொகுதிகளுக்கான பட்டியலை டெல்லி மேலிடத்திற்கு காங்கிரஸ் அனுப்பி வைத்துள்ளதாகவும் அங்கு அதற்கு ஒப்புதல் கிடைத்த அடுத்த கணம் தமிழகத்தில் திமுகவுடன் தொகுதி உறுதிப்படுத்தப்படும் என நேற்று தகவல் வெளியானது.

ஆனால் இன்று பேட்டி அளித்த ஸ்டாலின் இன்று அல்லது நாளைக்குள் அனைத்தும் முடிந்து அறிவிப்போம் என பேட்டி அளித்தார். காங்கிரஸ் தரப்பிலும் மேலிடத்திற்கு அனுப்பி வைத்த லிஸ்ட் அனுமதி கிடைத்தவுடன் அண்ணா அறிவாலயம் செல்லலாம் என காத்திருந்தனர்.

ஆனால் இரவுவரை எந்த தகவலும் இல்லாததால் இரவு 8-30 மணி அளவில் சத்தியமூர்த்தி பவனிலிருந்து அனைவரும் புறப்பட்டுச் சென்றனர். இதுகுறித்து காங்கிரஸ் தரப்பில் விசாரித்தபோது வழக்கமாக உடனடியாக பதில் வந்துவிடும், ஆனால் இந்தமுறை மீண்டும் மீண்டும் இழுபறி நீடிக்கிறது, திமுக தரப்பில் திடீரென 2 தொகுதிகளை மீண்டும் கேட்பதால் மறுபடியும் பேச்சுவார்த்தை நீள்கிறது என்று தெரிவித்தனர்.

காங்கிரஸ் தரப்பில் வழக்கமாக ஏற்கப்படும் கன்னியாகுமரி, சிவகங்கை, ஆரணி, விருதுநகர், தேனி உள்ளிட்ட தொகுதிகள் திமுக வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. அதேநேரம் திருச்சி, ஈரோடு, தென் சென்னை, அரக்கோணம், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தொகுதிகளை காங்கிரஸ் கேட்க அதில் திருச்சி அரக்கோணம் ஆரணி உள்ளிட்ட தொகுதிகளுக்கு திமுக ஒப்புதல் அளித்துள்ளதாக நேற்று கூறப்பட்டது.

இது தவிர கூடுதலாக திடீரென காங்கிரஸ் டெல்லி மேலிடத்தில் இருந்து திண்டுக்கல் தொகுதியை கேட்பதாகவும் அதையும் ஒதுக்கி பேச்சுவார்த்தை முடிவடைந்ததாக கூறப்பட்டது.

இதன் மூலம் காங்கிரஸ் 1.திருவள்ளூர், 2.அரக்கோணம், 3.ஆரணி, 4.திருச்சி, 5.சிவகங்கை, 6.தேனி, 7.விருதுநகர், 8. திண்டுக்கல், 9.கன்னியாகுமரி மற்றும் 10. புதுச்சேரியில் நிற்பது உறுதியாகி உள்ளதாக காங்கிரஸ் வட்டார தகவல் வெளியானது.

ஆனால் நேர்காணலில் திமுக நிர்வாகிகள் திருச்சி தொகுதியில் திமுக நின்றே ஆகவேண்டும் என வற்புறுத்தியதாகவும் ஸ்டாலினும் அதற்கு பேசிப்பார்க்கிறேன் எனச் சொன்னதாகவும், பழைய வேட்பாளர் அன்பு போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதேப்போன்று அரக்கோணம் தொகுதியிலும் திடீரென இழுபறி நீடிப்பதாகவும் இதற்குப்பதில் வேறு இரண்டுத் தொகுதிகளை தர திமுக பேசி வருவதாகவும், அதில் முடிவு வந்தப்பிறகே ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிகிறது.

அனைத்து விஷயங்களையும் திமுக தலைவர் ஸ்டாலினே நேரடியாக டெல்லித்தலைமையுடன் பேசுவதால் டெல்லித்தலைமை முடிவெடுத்து சொன்னவுடன் கையெழுத்திட தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தயார் நிலையில் உள்ளனர் என காங்கிரஸ் வட்டாரதகவல் தெரிவிக்கிறது.

இதனிடையே நாளை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் கன்னியாகுமரி சென்கின்றனர். நாளை மறுநாள் (மார்ச் 13 ) நடக்கும் ராகுல் பொதுக்கூட்ட ஏற்பாடுகளை பார்வையிட செல்கின்றனர். அதனால் நாளை கையெழுத்தாவது கேள்விக்குறியே.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x