

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, ‘பேட்டரி டார்ச்’ சின்னத்தை ஒதுக்கி, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில், மக்கள் நீதி மய்யம் தனித்து களம் காண்பது என முடிவெடுத்துள்ளது. மக்கள் நீதி மய்யத்தின் சார்பில், போட்டியிடுவதற்கு கடந்த வாரங்களில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், ராமநாதபுரம், தென்சென்னை, திருப்பூர் முதலான தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என பலரும் விருப்ப மனுக்களை அளித்திருந்தனர்.
இதேபோல் துணைத் தலைவர் மகேந்திரன், நடிகை ஸ்ரீப்ரியாவுக்காகவும் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டன.
கமல்ஹாசன், தன் சொந்த ஊரான ராமநாதபுரம் தொகுதியில் களம் காண்பார் என்ற பேச்சும் அடிபடுகிறது.
இந்த நிலையில், மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம், மக்கள் நீதி மய்யம் சார்பில் கொண்டாடப்பட்டது. அப்போது நடிகை கோவை சரளா, மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, தேர்தல் ஆணையம் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, ‘பேட்டரி டார்ச்’ சின்னம் ஒதுக்கியிருப்பதாக, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.