

கடற்கரை - தாம்பரம் தடத்தில் பராமரிப்புப் பணி காரணமாக இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு இரவு 8.28, 9.30, 11.05, 11.30, 11.59 மணிக்கு கிளம்பும் மின்சார ரயில்களும், தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு இரவு 10.25, 10.45 மணிக்கு புறப்படும் ரயில்களும் திங்கள் முதல் சனி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், செங்கல்பட்டில் இருந்து இரவு 10.15 மணிக்கு கடற்கரைக்கு புறப்படும் ரயில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் ஏப்ரல் 5-ம் தேதி வரை ரயில் சேவையில் இவ்வாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் எவ்வித மாற்று ஏற்பாடும் செய்யாமல் திடீரென ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
மாற்றுப்பாதையில் இயக்கலாம்
இதுதொடர்பாக பயணிகள் சிலர் கூறுகையில், ‘‘புறநகர் பகுதிகளில் இருந்து சென்னைக்கு வரும் மக்கள் மின்சார ரயில்களையே நம்பி உள்ளனர். ஆனால், எந்த மாற்று ஏற்பாடும் செய்யாமல், திடீரென ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்பு, மின்சார ரயில் பாதையில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், மக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் விரைவு ரயில்கள் இயக்கப்படும் பாதையில் மின்சார ரயில்கள் இயக்கப்படும். அவ்வாறு மாற்று ஏற்பாடு எதுவும் செய்யாமல் ரயில்களை ரத்து செய்துள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்’’ என்றனர்.