

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு 'பரம்வீர் சக்ரா' விருது வழங்க வேண்டும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, முதல்வர் பழனிசாமி இன்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், "கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது எனும் தீவிரவாத அமைப்பு, தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தியதில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர்.
இதற்கு பதிலடியாக ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயிற்சியாளர் முகாம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் அரசால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தன், பிரதமர் மோடியின் நடவடிக்கையாலும், சர்வதேச அழுத்தத்தாலும் கடந்த 1 ஆம் தேதி விடுவிக்கப்பட்டார்.
விமானப்படை வீரர் அபிநந்தனின் செயல் நாடு முழுவது பலரது மனதைக் கவர்ந்தது. அவருக்கு இந்திய அரசின் உயரிய ராணுவ விருதான 'பரம்வீர் சக்ரா' விருது வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.