Last Updated : 06 Mar, 2019 10:05 AM

 

Published : 06 Mar 2019 10:05 AM
Last Updated : 06 Mar 2019 10:05 AM

பல்லாங்குழி சாலைகளால் பரிதவிக்கும் மக்கள்!

ஆட்டோவில் பிரசவத்துக்கு கிளம்பினால், வழியிலேயே குழந்தை பிறந்துவிடும் என்று, குண்டும், குழியுமான சாலையைப் பற்றி நகைச்சுவையாக கூறுவார்கள். கோவையைப் பொருத்தவரை இது உண்மையாகிவிடும் போலிருக்கிறது. அந்த அளவுக்கு, பழுதடைந்த சாலைகளால் பரிதவித்து வருகிறார்கள் பயணிகள். அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகும்போதெல்லாம், “மொதல்ல நல்ல ரோடு  போடுங்கப்பா, ஆபீஸ் போயிட்டு வர்றதுக்குள்ள இடுப்பே உடஞ்சிடுது” என்று புலம்புகின்றனர் கோவை மக்கள்.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக, மிகப் பெரிய தொழில் நகரம் கோவை. தொழில் துறை மட்டுமல்ல, கல்வி, சுற்றுலா, மருத்துவம் என அனைத்துத் துறைகளிலும் வெகு வேகமாய் முன்னேறி வரும் கோவையின் வளர்ச்சிக்கேற்ப, சாலைகள் மேம்படுத்தப்படுகிறதா என்பது கேள்விக்குறியே?

கோவை மாவட்டத்தில் ஏறத்தாழ 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். வாகனங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. இதற்கேற்ப  போக்குவரத்து நெரிசல், விபத்துகளும் அதிகரிக்கின்றன. எனவேதான், சேதமடைந்த நிலையில் உள்ள சாலைகளை விரைவாகச் சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

கோவை மாநகரில் சுமார் 1,200 கிலோமீட்டர் தொலைவுக்கு மாநகராட்சி சாலைகள், 200 கிலோமீட்டர் தொலைவுக்கு  மாநில நெடுஞ்சாலை, சுமார் 100 கிலோமீட்டர் தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைத்துள்ளன. மாநகராட்சிப் பகுதியில் மட்டும் 3,500-க்கும் மேற்பட்ட வீதிகளும் உள்ளன.மத்திய அரசின் ஜே.என்.என்.யு.ஆர்.எம்.  திட்டத்தின் கீழ், கோவையில் பாதாள சாக்கடைத்  திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி இந்த திட்டத்தை 3 கட்டங்களாக மேற்கொண்டுள்ளது. ஏற்கெனவே, முதல்கட்டமாக  ரூ.69.65 கோடியில் 166.72 கிலோமீட்டர் தொலைவுக்கும்,  இரண்டாம் கட்டமாக ரூ.56.30 கோடியில் 126 கிலோமீட்டர் தொலைவுக்கும் பாதாள சாக்கடைத்  திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு விட்டன. மூன்றாம் கட்டப் பணிகள் ரூ.143.65 கோடி மதிப்பில் 297.46 கிலோமீட்டர் தொலைவுக்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முற்றுப் பெறாத பாதாள சாக்கடை திட்டம்

கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்  கிழக்கு, வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தொடங்கப்பட்ட இப்பணி, இதுவரை முடிவடையவில்லை. மாநகரின் பழைய 72 வார்டுகளில் 3 ஆண்டுகளில் முடிக்கத் திட்டமிட்ட பாதாள சாக்கடைப் பணி, 9 ஆண்டுகளாகியும் நிறைவடையாதது மக்களை அதிருப்திக்குள்ளாகியுள்ளது.

இது தொடர்பாக கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், சிங்காநல்லூர் எம்எல்ஏ-வுமான  நா.கார்த்திக் கூறும்போது, “மாநகரில் பாதாள சாக்கடை, குடிநீர்க்  குழாய்கள் மற்றும் கேபிள், தொலைபேசி, இணையதளத்துக்கான வயர்கள் பதிக்கவும், பாதாள சாக்கடைக் குழாய்களுக்கு வீட்டு இணைப்பு வழங்கவும்  சாலைகள் தோண்டப்படுகின்றன. முயல் வேகத்தில் சாலைகள் தோண்டப்பட்டாலும், சீரமைக்கப்படுவதில் ஆமை வேகம்தான். சீரமைப்புப் பணிகளில் காட்டப்படும் மெத்தனத்தால், நாளுக்கு நாள் சாலைகளின் சேதம் அதிகமாகிறது. மேலும்,  புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலையும், சில வாரங்களிலேயே பெயர்ந்துவிடுகிறது.

சித்தாப்புதூர் மின் மயான சாலை, வி.கே.கே. மேனன் சாலை, சிங்காநல்லூர் கள்ளிமடை, ஆவாரம்பாளையம் சிந்தாமணி நகர், ஒண்டிப்புதூர் முதல் இருகூர் ரயில்வே மேம்பாலம் வரையிலான சாலை, செல்வபுரம், பேரூர் சாலை, உக்கடம் புட்டுவிக்கி சாலை, சாய்பாபா காலனி, பீளமேடு விளாங்குறிச்சி சாலை, பீளமேடு ரயில்நிலையம் சாலை, கிரியம்மன் கோயில் வீதி, அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயில் சாலை, முத்து வீதி, மீனா கார்டன், மேட்டுப்பாளையம் சாலை, கணபதி, சவுரிபாளையம் சாலை, எல்லை தோட்டம் சாலை, கொடிசியா சாலை, உக்கடம் - செல்வபுரம் பைபாஸ் சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை என மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாகவே காட்சியளிக்கின்றன.

முடங்கிய உள்ளாட்சி நிர்வாகம்?

உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால், சில ஆண்டுகளாக மக்கள் பிரதிநிதிகள் இல்லாமலேயே உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுகின்றன. இதனால், மத்திய, மாநில அரசுகளின் நிதி முழுமையாக கிடைப்பதில்லை. முறையான நிர்வாகமின்றியும்,

நிதிப் பற்றாக்குறையாலும் சிக்கித் தவிக்கும் மாநகராட்சி நிர்வாகம், சாலை சீரமைப்புகளில் கவனம் செலுத்துவதே இல்லை. தார் சாலைகளை அமைக்கும்போது, முறையான விகிதத்தில் தார் கலந்து, தரமாக அமைக்க வேண்டும். அதேபோல, பழுதடைந்துள்ள சாலைகளைச் சீரமைக்க வேண்டுமென மாநகராட்சி ஆணையரிடம் பலமுறை மனு அளித்தும், பலனில்லை. இனியாவது,

தரமானசாலைகளை அமைக்கவும், சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்கவும், தரமற்ற  சாலைகளை அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முன்வர வேண்டும்” என்றார்.

`பேட்ஜ் ஒர்க்` அவசியம்!

சமூக ஆர்வலர் ஆவாரம்பாளையம் ராஜ்குமார் கூறும்போது, “குண்டும், குழியுமான சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். பலருக்கும் முதுகு வலி, கால் வலி போன்றவை ஏற்படுவதுடன், சேதமடைந்த சாலைகளால் அடிக்கடி விபத்துகளும் நேரிட்டு, பலர் காயமடைகின்றனர்.

 மேலும், வாகனங்களும்  அடிக்கடி பழுதாகின்றன. மழைக் காலங்களில் இந்த சாலைகள் சேறும், சகதியுமாக மாறுவதால், அவ்வழியே செல்லவே முடியாத நிலை உருவாகிறது.பல்வேறு காரணங்களுக்காக தோண்டப்படும் சாலைகளை,  தற்காலிக அடிப்படையிலாவது (பேட்ஜ் ஒர்க்) சீரமைக்க வேண்டும். தார் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகளான பகுதிகளில், புதிதாக சாலை அமைக்க வேண்டும்” என்றார்.

நெடுஞ்சாலைத் துறைக்கு சம்பந்தமில்லை!

இது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள்  கூறும்போது, “மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட நெடுஞ்சாலைகளில் பழுது ஏற்பட்டால், மாநகராட்சி நிர்வாகம்தான் சீரமைக்க வேண்டும். சீரமைப்புப் பணிகளில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபடுவதில்லை” என்றனர்.

சாலை சீரமைப்புப் பணிகள் தீவிரம்...

மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “கோவை மாநகரில்சாலை சீரமைப்புப் பணிகளில் மாநகராட்சி நிர்வாகம் உரிய கவனம் செலுத்துகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்புகூட, சில கோடி மதிப்பீட்டில் பேட்ஜ் ஒர்க், தார் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. உக்கடம் புட்டுவிக்கி சாலை, சர்க்யூட் ஹவுஸ் சாலை, புலியகுளம் சாலை உள்ளிட்ட இடங்களில் புதிய தார் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.  பழுதடைந்த சாலைகள் குறித்து மண்டலம் வாரியாக கணக்கெடுப்பு நடத்தி, டென்டர் விட்டு, தக்க  ஒப்பந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, சாலைகளைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றனர்.

மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத் கூறும்போது, “மாநகராட்சிப் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட சாலைப் பணிகள், பல கோடி மதிப்பில் நடைபெற உள்ளன. இதற்கான பணி ஒப்புதலும் அண்மையில் அளிக்கப்பட்டுவிட்டது. குண்டும், குழியுமாக காணப்படும் சாலைகளில் பேட்ஜ் ஒர்க் செய்யும் பணியும், புதிதாக தார் சாலை அமைக்கும் பணிகளும் விரைவில் தொடங்கும்” என்றார்.

படங்கள்: ஜெ.மனோகரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x