Last Updated : 11 Mar, 2019 01:07 PM

 

Published : 11 Mar 2019 01:07 PM
Last Updated : 11 Mar 2019 01:07 PM

உடுமலை வனப்பகுதியில் மர்ம நபர்கள் ஊடுருவல்? - வனத்துறை, போலீஸார் தேடுதல் வேட்டை

உடுமலை அருகே வனப் பகுதியில் மர்ம நபர்கள் ஊடுருவியதாக கிடைத்த தகவலை அடுத்து, வனத்துறை மற்றும் போலீஸார் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் இருந்து கேரளா மாநிலம் மூணார் செல்லும் வழியில் தமிழக வனத்துறைக்கு சொந்தமான உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகம் உள்ளது. இந்த வனப்பகுதிகளிலும் பல ஆண்டுகளாக நக்சல் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம், பழநி அதிவிரைவு படைப் பிரிவில் உள்ள நக்சல் தடுப்பு போலீஸார் இவ்விரு வனப்பகுதிகளிலும் அவ்வப்போது ரோந்து சென்று வருகின்றனர்.

 இந்நிலையில், மர்ம கும்பல் ஒன்று அமராவதி வனச்சரகத்தில் ஊடுருவி இருப்பதாக தகவல் பரவியது. இந்த வனப்பகுதிகளில் தீ பரவாமல் தடுக்கும் பணி நடைபெறுகிறது. அதில், அமராவதி நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சின்னராஜ் (30), தீத்தடுப்பு பணிக்காக அங்கேயே தங்கியுள்ளார். நேற்று முன்தினம் தளிஞ்சி பகுதியில் மர்ம நபர்களின் நடமாட்டத்தை இவர் கண்டுள்ளார். இதுகுறித்து அளித்த தகவலின்பேரில், வனத்துறையினர் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவினர் முகாமிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக சின்னராஜ் கூறும்போது, ‘நேற்று முன்தினம் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது, 10 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. அவர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி பேசினர். ஒருவர் மட்டும் தமிழில் பேசினார். அவர்களில் 4 பேர், பெரிய அளவிலான பைகளை தோளில் சுமந்தபடி சென்றனர். என்னை அழைத்துபோது, அங்கிருந்து ஓடி வந்துவிட்டேன்’ என்றார்.

 தளிஞ்சி மலை கிராம ஊர் தலைவரின் மனைவி அம்சவேணி கூறும்போது, ‘மர்ம நபர்கள் குழந்தைகளை பற்றி விசாரித்தது, அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் குடியிருப்புக்கு அருகே மாட்டுப்பட்டியில் இருந்து அரிசி, கருவாடுகளையும் எடுத்துச் சென்றுள்ளனர். தகவல் கிடைத்ததும் வனத்துறையுடன் சேர்ந்து மர்ம நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டோம். இதுகுறித்து தமிழக அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும்’ என்றார்.

 இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘வனவர் தலைமையில் 8 வேட்டைத்தடுப்பு காவலர்கள் மற்றும் மலைவாழ் மக்களைக் கொண்ட 4 குழுக்கள் சுமார் 10 கி.மீ. வரை தேடுதல் பணியில் ஈடுபட்டது. காலை 6 முதல் காலை 11 மணி வரை தூவானம், வரவண்டி, பாறைத்துறை வரை தேடியும் எந்த பலனும் இல்லை. கால் தடம் மண்ணில் படாமல் இருக்க, பாறைகளின் வழியாக மர்ம நபர்கள் நடந்து சென்றுள்ளனர். வனப்பகுதிக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை. அதனால், அவர்களின் நடமாட்டத்தை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது’ என்றனர்.

தளி காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில் தளி போலீஸார் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு எஸ்.ஐ பாலாஜி மேற்பார்வையில் ஆயுதம் ஏந்திய நக்சல் தடுப்பு போலீஸார் நேற்று பிற்பகல் 3 மணியளவில் தளிஞ்சி பகுதியில் முகாமிட்டு தேடுதல் பணியை தொடங்கியுள்ளனர்.

போலீஸார் கூறும்போது, ‘மர்ம நபர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. அத்துமீறி நுழைந்த நபர்களை பிடிக்க திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், பழநி, திருப்பூர் மாவட்டம் அமராவதி ஆகிய இடங்களில் இருந்து நக்சல் தடுப்பு மற்றும் அதிவிரைவுப்படை போலீஸார் 4 குழுக்களாக, வனப்பகுதியில் தேடுதல் பணியை தொடங்கியுள்ளனர். மர்ம நபர்கள் பிடிபட்டால்தான், மற்ற விவரங்கள் தெரியவரும்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x