வேட்பாளரைத் தாக்கியதாக புதிய தமிழகம் கட்சியினர் மீது வழக்கு :தொலைக்காட்சிக்கு பிரச்சாரம்: கிருஷ்ணசாமி மீதும் வழக்கு

வேட்பாளரைத் தாக்கியதாக புதிய தமிழகம் கட்சியினர் மீது வழக்கு :தொலைக்காட்சிக்கு பிரச்சாரம்: கிருஷ்ணசாமி மீதும் வழக்கு
Updated on
1 min read

திருவில்லிபுத்தூர் அருகே தென்காசி தொகுதி சுயேச்சை வேட்பாளரைத் தாக்கியதாக புதிய தமிழகம் கட்சியினர் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்ததாக டாக்டர் கிருஷ்ணசாமி மீதும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

திமுக கூட்டணியின் தென்காசி தொகுதி வேட்பாளர் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி. இதே தொகுதி சுயேச்சை வேட்பாளர் மதுரை, சர்வேயர் காலனி, யமுனா தெருவைச் சேர்ந்த எஸ்.ராதாகிருஷ்ணன்.

வியாழக்கிழமை திருவில்லி புத்தூர் ஆர்.சி. தேவாலய சந்திப்பில் ராதாகிருஷ்ணன் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது, காரில் வந்த 15 பேர் கொண்ட கும்பல், ராதாகிருஷ்ணனை இழிவாகத் திட்டி தாக்குதல் நடத்தியதாகவும், அவரிடமிருந்த ரூ. 47 ஆயிரத்தை பறித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இத்தாக்குதலில் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் பலத்த காயமடைந்தார். இதுகுறித்து காவல் நிலையத்தில் ராதாகிருஷ்ணன் புகார் கொடுத்துள்ளார். போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சுயேச்சை வேட்பாளர் ராதாகிருஷ்ணன், டாக்டர் கிருஷ்ணசாமியை இழிவுபடுத்தி பேசி, துண்டுப் பிரசுரம் விநியோகித்ததாகவும், அதை கேட்டபோது, காரை ஏற்றி கொலை செய்ய முயன்றதாகவும் திருவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புதிய தமிழகம் தேர்தல் பொறுப்பாளர் ராஜலிங்கம் புகார் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் ராதாகிருஷ்ணன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணசாமி மீது வழக்கு

ராஜபாளையம் அருகேயுள்ள துரைசாமிபுரம் மற்றும் அழகியநகர் முதல்தெருவில் தேர்தல் விதிமுறைகளை மீறி தொலைக்காட்சிக்கு பிரச்சாரம் செய்ததாக டாக்டர் கிருஷ்ண சாமி, புதிய தமிழகம் மாவட்டச் செயலர் ராமராஜ், திமுக நகர் செயலர் ராஜா அருண்மொழி ஆகியோர் மீது ராஜபாளையம் தெற்கு போலீஸார் தனித்தனியே இரு வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in