Published : 01 Sep 2014 10:00 AM
Last Updated : 01 Sep 2014 10:00 AM

9 மீனவர்கள் கடலில் தத்தளிப்பு: கடலோர காவல் படையினர் மீட்டனர்

புதுவை அருகே நடுக்கடலில் தத்தளித்த நாகை, நாகூர் மீனவர்கள் 9 பேரை கடலோரக் காவல் படையினர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மீட்டனர்.

நாகப்பட்டினம் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் 9 பேர் விசைப்படகு உரிமையாளர் ராஜேந்திரன் தலைமையில் கடந்த 26-ம் தேதி ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். இப்படகில் நாகையைச் சேர்ந்த சதீஷ், மகேந்திரன், அரவிந்த், சிவா, அப்பு, பாலகிருஷ்ணன், நாகூரைச் சேர்ந்த பாலு, ராஜு ஆகியோர் இருந்தனர்.

இவர்கள் கடந்த 4 நாட்களாக ஆழ்கடலில் மீன்பிடித்தனர். இந்நிலையில் சனிக்கிழமை இரவு டீசல் இல்லாததால் நடுக்கடலில் படகு நின்று விட்டது. மேலும் படகும் பழுதானது. இதையடுத்து நாகப்பட்டினத்தில் உள்ள மீன் வளத்துறைக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

தமிழக மீன்வளத்துறையினர் புதுவை கடலோர காவல்படையினரை தொடர்புகொண்டு அவர்களை மீட்டு அனுப்பும்படி கேட்டுக்கொண்டனர். இதையடுத்து புதுவை கடலோர காவல்படை கமாண்டர் சோமசுந்தரம், கேப்டன் குமாருக்கு மீனவர்களை மீட்டு வர உத்தரவிட்டார். கேப்டன் குமார், பொறியாளர் ஸ்ரீநாத், உதவியாளர்கள் மேத்தா, வருண்குமார் ஆகியோர் 25 லிட்டர் டீசல், பழுதுபார்க்கும் சாதனங்களுடன் கடலுக்குள் சென்றனர்.

சனிக்கிழமை இரவு சென்ற அவர்கள் ஞாயிறுக்கிழமை அதிகாலை சுமார் 3 மணியளவில்படகை கண்டுபிடித்தனர். புதுவை கலங்கரை விளக்கத்திலிருந்து 23 கடல் மைல் தொலைவில் அந்த படகு நின்றிருந்தது. படகின் பழுதை சரிபார்த்து டீசல் நிரப்பி புதுவைக்கு காலை 6 மணிக்கு அழைத்து வந்தனர். புதுவை மீன்பிடி துறைமுகத்தை ஆழப்படுத்தும் பணி நடந்து வருவதால் படகு வீராம்பட்டினம் கடலில் நிறுத்தப்பட்டது. மீட்கப்பட்ட மீனவர்களுக்கு சாப்பாடு, டீசல் உள்ளிட்டவற்றை அளித்து சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x