Published : 12 Mar 2019 12:24 PM
Last Updated : 12 Mar 2019 12:24 PM

பொள்ளாச்சி பாலியல் பயங்கரம்: எங்கள் பெண் குழந்தைகளின் ஓலத்தை அரசியலாக்காதீர்கள்; தமிழிசை வேண்டுகோள்

எங்கள் பெண் குழந்தைகளின் ஓலத்தை அரசியலாக்காதீர்கள் என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்களை சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி, பாலியல் தொந்தரவு கொடுத்து, அதை வீடியோவாக எடுத்து மிரட்டியதாக, திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்யப்பட்டனர்.

இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என, அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "பொள்ளாச்சியின் அதிர்வு இதயத்துடிப்பை அதிர்வடையச்செய்கிறது. குற்றவாளிகள் தயவுதாட்சணியமில்லாமல் தண்டிக்கப்படவேண்டும். பிறக்காத பெண் சிசு கூட கலைக்கப்படக் கூடாது என்றிருக்கும் என் தேசத்தில், எங்கள் பெண் குழந்தைகளின் தேகங்கள் சிதைக்கப்படும்போது எப்படித் தாங்குவது எரிமலையாய் வெடிப்போம்.

அதேநேரத்தில் எங்கள் பெண் குழந்தைகளின் ஓலத்தை அரசியலாக்காதீர்கள், போராட்டங்களைவிட போராட்டமான அவர்களின் வாழ்க்கையை மீட்டெடுப்போம்.

இன்றிலிருந்து எம் கடமை, வெளிச்சத்திற்கு கொண்டு வராமல் அந்த வெள்ளை உள்ள இளம் தளிர்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க மருத்தவ ரீதியாகவும் மன ரீதியாகவும் அந்தக் கொடுஞ்சம்பவங்களின் மனநிலையிலிருந்து மீட்டு மருந்தாக இருந்து மனக்காயங்களையும் உடல்காயங்களையும் மறக்க வைத்து பட்ட துன்பம் மறைந்து குதித்தோடி பட்டாம்பூச்சிகளாக பறக்கவைத்து அதேநேரத்தில் கொத்த வந்தால் கழுகுகளாக மாறிக் குத்திக் குதறுவோம் என்ற நம்பிக்கையை ஊட்டுவது என் வேலை" என தமிழிசை பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x