Published : 06 Mar 2019 12:03 PM
Last Updated : 06 Mar 2019 12:03 PM

பாஜக அரசின் தளபதி தம்பிதுரை:- ட்விட்டரில் ஜோதிமணி கிண்டல்

அதிமுக எம்.பி. தம்பிதுரையை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டல் செய்திருக்கிறார். 'பாஜக அரசின் தளபதி தம்பிதுரை' என அவர் விமர்சித்திருக்கிறார்.

சில காலமாக நாடாளுமன்றத்திலேயேகூட பாஜகவை கடுமையாக விமர்சித்துவந்த அதிமுக எம்.பி. தம்பிதுரை சமீப நாட்களாக பாஜகவை ஆதரித்து பொதுமேடைகளில் பேசி வருவதாகக் குறிப்பிட்டு அவரை ஜோதிமணி கிண்டல் செய்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிஜேபிக்கு  நாலரை ஆண்டுகள் கைகட்டி சேவகம் செய்துவிட்டு, 48 மணி நேரத்திற்கு மட்டும் எதிர்த்த மாவீரர், பினாமி பிஜேபி அரசின் தளபதி தம்பிதுரை பராக்! பராக்!" எனப் பதிவிட்டுள்ளார்.

பாஜக மீதான தம்பிதுரையின் விமர்சனங்கள்:

பாஜகவின் இடைக்கால பட்ஜெட் அக்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் என தம்பிதுரை விமர்சித்திருந்தார். 'தமிழகத்தில் பாஜக வளர, அவர்களை அதிமுக ஏன் தூக்கிச் சுமக்க வேண்டும், அதற்கு நாங்கள் என்ன பாவம் செய்தோம்’ என தம்பிதுரை பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. அவரது பேச்சை திமுக எம்.பி. கனிமொழிகூட வரவேற்றார்.

இந்நிலையில், மக்களவை தேர்தலுக்காக பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துவிட்ட நிலையில் பாஜகவையும் பிரதமர் மோடியையும் தம்பிதுரை வரவேற்று வருகிறார்.

அண்மையில், கரூரில் பேசிய அவர் "பாஜகவுடன் அதிமுக சேர்ந்திருப்பது தேர்தலுக்கான கூட்டணி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். கொள்கைக்கான கூட்டணி அல்ல. உலக அளவில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக பிரதமர் மோடி மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்" என்று பாராட்டினார்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டும் அண்மையில் ஒரு வார இதழுக்கு பிரதமராக மோடி வரவேண்டும் என்பதே மக்கள் விருப்பம் என்று தம்பிதுரை அளித்த பேட்டியை சுட்டிக்காட்டி இந்த ட்வீட்டை பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x