

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி நடைபெறும் நிகழ்வுகள் நவீன கேமரா பொருத்தப்பட்ட ஆளில்லா உளவு விமானங்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. மேலும் பாதுகாப்பு பணிக்காக சுமார் 5 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரையிலான 4 ஆண்டுகளில் தென் மாவட்டங்களில் நடைபெற்ற ஜாதிரீதியான குரு பூஜைகள் மற்றும் ஜெயந்தி விழா காரணமாக நடைபெற்ற கலவரங்கள் காரணமாக 29 பேர் உயிரிழந்துள்ளனர். 336 பேர் காயம் அடைந்துள்ளனர். சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள பொது சொத்துகள் சேதம் அடைந்துள்ளன. 370-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இன்று (வியாழக்கிழமை) இமானுவேல் சேகரனின் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்த பல்வேறு கட்சியினர், அமைப்பினர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் பரமக்குடிக்கு வர உள்ளனர். இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரமக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
ஆள் இல்லாத விமானங்கள்
சென்னை அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் குழுவினரால் இயக்கக்கூடிய 5 கி. மீ. சுற்றளவில் பறந்து செல்லும் ஆளில்லா விமானங்கள் பரமக்குடியில் தயார் நிலையில் உள்ளன. 6 பேர் கொண்ட குழுவினர் செப். 11-ம் தேதி காலை முதல் தொடர்ந்து இந்த விமானங்கள் மூலம் கண்காணிப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.