Published : 21 Mar 2019 01:01 PM
Last Updated : 21 Mar 2019 01:01 PM

தலை துண்டாகி குழந்தை பிறந்த சம்பவம்: நேர்மையான விசாரணை நடத்திடுக; இரா.முத்தரசன்

காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்தின் போது குழந்தை தலை துண்டிப்பு சம்பவம் குறித்து நேர்மையான விசாரணை நடத்திட வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இரா.முத்தரசன் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "நேற்று காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே உள்ள கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவ வலியுடன் பொம்மி என்ற பெண் காலை 6 மணியளவில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் இல்லாத நிலையில் செவிலியர்கள் பிரசவம் பார்த்தனர். இதில் குழந்தையின் தலை தனியாக துண்டிக்கப்பட்டது. பின்னர் அப்பெண் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவரது கர்ப்பப்பையில் இருந்து குழந்தையின் தலையற்ற உடல் பாகம் அகற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.

இதுகுறித்து நேர்மையான விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும்.

தமிழகத்தில் பாதுகாப்பற்ற முறையில் பிரசவங்கள் நடைபெறுவது அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. இதனால் பேறுகால தாய்மார்களும், பச்சிளங் குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர்.

24 மணி நேரமும் மகப்பேறு மருத்துவர், மயக்க மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர்கள் உள்ள, ரத்த வங்கி அல்லது ரத்த சேமிப்பு மையம் மற்றும் சுகாதார ஊழியர்களுடன் கூடிய அறுவை அரங்கம் உள்ள மருத்துவமனைகளில், பாதுகாப்பான முறையில் பிரசவம் நடைபெறுவதை தமிழக அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும். இலக்கு நிர்ணயித்து, வசதிகளற்ற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவம் பார்ப்பதை கட்டாயப்படுத்துவதாலேயே இதுபோன்ற நிலை ஏற்படுகிறது. இதுபோன்றுகட்டாயப்படுத்தும் போக்கை தவிர்க்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட தமிழக அரசின் அனைத்து  மருத்துவமனைகளின் சேவைத் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x