

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 11 சதவீத ஊதிய உயர்வை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் கோகுல இந்திரா அறிவித்துள்ளார்.
கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க விழா தேனாம்பேட்டை வானவில் விற்பனை நிலை யத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் கோகுல இந்திரா, சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் வளர்மதி, சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, கைத்தறித் துறை முதன்மை செயலர் ஹர்மந்தர்சிங், கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குநர் டி.என்.வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டு தீபாவளி விற் பனை காலத்துக்கான “தங்க மழை” திட்டத்தை அமைச்சர் கோகுல இந்திரா தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில், “நடப்பு ஆண்டில் ரூ.182 கோடி தீபாவளி சிறப்பு விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக் காலத்தில் ரூ.121.29 கோடி அளவுக்கு ஜவுளி விற்பனையானது.
வரும் ஜனவரி மாதம் வரை நாடு முழுவதும் உள்ள 197 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் 30 சதவீத தள்ளுபடி அமலில் இருக்கும். தீபாவளி சிறப்பு விற்பனையை முன்னிட்டு அனைத்து கடைகளிலும் “தங்க மழை திட்டம்” அறிமுகம் செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டை போன்று இந்த முறையும் ரூ. 500 மதிப்பி லான பரிசுக் கூப்பன் திட்டம் நீடிக்கப்படுகிறது.
கோ-ஆப்டெக்ஸ் ஊழியர் களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 11 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது. இந்த ஊதிய உயர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இம்மாதம் 19-ம் தேதி வரை பொருந்தும். இதன்மூலம் 869 ஊழியர்கள் பயன்பெறுவார்கள். அனைத்து விற்பனை நிலையங்களும் நவீன மயமாக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.