Published : 04 Mar 2019 11:06 AM
Last Updated : 04 Mar 2019 11:06 AM

புதிய பேருந்து நிலையம்!- நாமக்கல் மக்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

சரக்குப் போக்குவரத்தில் இந்திய அளவில் முன்னிலை வகிக்கும் மாவட்டமாக உள்ளது நாமக்கல். அதேசமயம், போக்குவரத்து நெரிசலிலும் மாவட்டத் தலைநகரான நாமக்கல்முன்னிலை வகிக்கிறது என்கிறார்கள் பொதுமக்கள்.

நாமக்கல் நகரின் மையப் பகுதியில் சுமார் 3.50 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது பேருந்து நிலையம். இங்கு தினமும் 62 ஆயிரம் பயணிகள் வந்து, செல்கின்றனர். மேலும், தினமும் புறநகர் பேருந்துகள்

1,346 முறையும், நகரப் பேருந்துகள் 549 முறையும் வந்து, செல்கின்றன. ஆனால், தற்போது ஒரே நேரத்தில் 27 பேருந்துகள் மட்டுமே பேருந்து நிலைய வளாகத்தில் நிறுத்தும் வசதி உள்ளது.

குறுகிய இடத்தில் பேருந்து நிலையம் அமைந்துள்ளதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து அபாயமும் நிலவுகிறது. எனவே,  இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் நாமக்கல் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய வேண்டும். குறிப்பாக, சேலத்தைப்போல புறநகர்ப்  பேருந்து நிலையத்தை, வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் மட்டுமின்றி, பல்வேறு அமைப்புகளும் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், கடந்த 2014-ல் நாமக்கல் நகர்மன்றக்  கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், புதிய பேருந்து நிலையத்துக்கான இடமும் தேர்வு செய்யப்பட்டது. நாமக்கல் முதலைப்பட்டி அருகே, இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான 12.90 ஏக்கர் நிலத்தில், புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவுசெய்யப்பட்டது.

அதே ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில், ரூ.35 கோடி மதிப்பில் நாமக்கல்லில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டது.

இது நாமக்கல் நகர மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும், பணிகள் எதுவும் தொடங்கப்படாமல், திட்டம் கிடப்பில் போடப்பட்ட நிலையிலேயே இருந்தது. இந்த நிலையில், கடந்த 2018-ல் நாமக்கல்லில் நடைபெற்ற எம்ஜிஆர்  நூற்றாண்டு விழாவின்போது, நாமக்கல்லில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தார்.

இதையடுத்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் துறை ஓர் அறிவிப்பை வெளியிட்டது. இதில், நாமக்கல் நகராட்சி சார்பில் ரூ.51.63 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும். இந்த திட்டம், பொதுத் துறை மற்றும் தனியார் பங்களிப்புத் திட்டத்தில் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை.

இது தொடர்பாக திமுக நிர்வாகியும், நகராட்சி முன்னாள் கவுன்சிலருமான சரவணன் கூறும்போது, ‘‘முதலைப்பட்டியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.51.63 கோடியாக உயர்ந்தது. தனியார் மூலம் பேருந்து நிலையம் அமைத்து, வாடகையை குறிப்பிட்ட ஆண்டுகள் அந்த நிறுவனமே வசூலிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தால், நகராட்சிக்கு எவ்வித வருவாயும் கிடைக்காது. எனவே, தனியார் நிறுவனம் மூலம் பணிகளை  மேற்கொள்ள வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையால்,  பேருந்து நிலையம் அமைக்கும் பணி தாமதமாகி வருகிறது” என்றார்.

நாமக்கல் நகராட்சி ஆணையர் கே.எம்.சுதா கூறும்போது, “பொதுத் துறை மற்றும் தனியார் பங்களிப்புத் திட்டத்தில் (பிபிபி), புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x