Published : 09 Mar 2019 01:21 PM
Last Updated : 09 Mar 2019 01:21 PM

ராணுவம் தொடர்பான ரகசியங்களை இலங்கைக்கு தெரிவித்தவர் கருணாநிதி: தமிழிசை விமர்சனம்

ராணுவம் சம்பந்தபட்ட ரகசியங்களை கருணாநிதி ஆட்சியில் இலங்கைக்கு தெரிவித்ததால் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது என்பதும் வரலாறு என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "மத்திய, மாநில அரசின் கண்காணிப்பில் இருந்து முக்கிய ஆவணங்கள் திருட்டு போவதாக கூறப்படுவது இது முதல் முறை அல்ல. கடந்த காலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது நிதிநிலை அறிக்கை வெளியிடுவதற்கு முன்பே காணாமல் போனதாக நிகழ்வுகள் உண்டு.

கடந்த காலத்தில் ராணுவம் சம்பந்தபட்ட ரகசியங்களை கருணாநிதி ஆட்சியில் இலங்கைக்கு தெரிவித்ததால் சந்திரசேகர் பிரதமராக இருந்த காலத்தில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது என்பதும் வரலாறு.

தமிழக வரலாற்றிலும் எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது கருணாநிதி எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேல் காணாமல் போன திருட்டை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட பால் கமிஷன் அறிக்கையை சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கும் முன்பே அதை திருடி வெளியிட்டது திமுக என்பது கடந்தகால வரலாறு. பால் கமிஷன் அறிக்கையை திருடி வெளியிட்டதால் திருச்செந்தூர் முருகன் கோயில் நிர்வாகி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என்பதும் அதற்கான நீதி விசாரணை கேட்டு கருணாநிதி நடைபயணம் செய்ததும் வரலாறு.

இதே பின்னணியில் வந்த திமுக தலைவர் ஸ்டாலின் அரசாங்கத்தில் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட ராணுவ ரகசிய ஆவணங்கள் முறைகேடாக திருடி பத்திரிகைகளில் கசிய விடுவது நாட்டுக்கு பாதகமாகவும், எதிரி நாட்டுக்கு சாதகமாகவும் அமையும் என்பதால் இந்த தேச துரோகத்தை கண்டிக்க வேண்டிய எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டிக்காமல் ஏதோ இதையும் மோடி எதிர்ப்புக்கு ஆதரவாக எடுத்துக்கொண்டு திருடுபவர்களுக்கு ஆதரவாகவும், ஊக்கமளிப்பதாகவும் அமையும்.

ஒரு பொறுப்பான எதிர்க்கட்சி நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் செய்யலாமா? இப்படி திருடுபவர்களையும் திருட்டை நியாயப்படுத்துவர்களையும் அதற்கு துணைபோவர்களையும் தேச துரோகிகள் என்று அழைப்பதில் என்னை தவறு. தன் சுயநல பதவி சுகத்துக்காக திருட்டுகளை நியாயப்படுத்தும் இவர்களும் ஜனநாயக திருடர்களே" என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x