Last Updated : 05 Mar, 2019 09:55 AM

 

Published : 05 Mar 2019 09:55 AM
Last Updated : 05 Mar 2019 09:55 AM

இலக்கியவாதிகளை கவுரவிக்கும் எழுத்தாளர்!- நாமக்கல் கு.சின்னப்ப பாரதி

இலக்கியவாதிகள் சிலருக்கு பிறரைப் பாராட்டவே மனமிருக்காது. மற்றவர்களின் திறமைகளை அங்கீகரிக்கவும் மாட்டார்கள் என்று கொஞ்சம்பேர் குறை கூறுவார்கள். இதில் எந்த அளவுக்கு உண்மையிருக்கிறது என்பது, சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். ஆனால், எழுத்தாளர்களைக் கவுரவிக்கும் எழுத்தாளர்களும், இலக்கியவாதிகளும் நிறைய பேர் உண்டு. அதில், குறிப்பிடத்தக்கவர் நாமக்கல் கு.சின்னப்ப பாரதி.

நாமக்கல்லைச் சேர்ந்த இவர்,  இலக்கிய வட்டாரத்தில் நன்கு பரிச்சயமானவர்.  மார்க்சிய இயக்கத்தைச் சேர்ந்த எழுத்தாளர் கு.சின்னப்ப பாரதி,  தனது 85-வது வயதிலும் தொடர்ந்து எழுத்துப் பணியை மேற்கொண்டுள்ளார். ஏழு நாவல்கள், 4 சிறுகதைத் தொகுப்புகள், இரு காவியங்களுக்கு இவர் சொந்தக்காரர்.

சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட அடித்தட்டு மக்கள், தொழிலாளர்களின் வாழ்க்கை, வர்க்கப் போராட்டம் மற்றும் அவர்களின் உரிமைகளைப் பற்றிப் பேசும் இவரது நாவல்கள் `சங்கம், தாகம், சர்க்கரை, பவளாயி’ போன்றவை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இதில், சங்கம் நாவல் ஆங்கிலம் மட்டுமின்றி, இந்தி, வங்காளம், குஜராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராட்டி, பிரெஞ்சு என மொத்தம் 9  மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவரது எழுத்துப் பணியை பொன்னீலன் போன்ற முன்னணி எழுத்தாளர்கள் பாராட்டி கட்டுரை எழுதியிருப்பது மட்டுமின்றி,  பல்வேறு இலக்கிய அமைப்புகளும் விருது வழங்கிக் கவுரவித்துள்ளன. அதேசமயம், இவரும் பல எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில், பாராட்டு விழா நடத்தி, விருது, பணமுடிப்பு வழங்கி வருகிறார்.

“நாமக்கல் அருகேயுள்ள வாழவந்தி பொன்னேரிப்பட்டிதான் எனது சொந்த ஊர். தந்தை குப்பண்ண கவுண்டர். விவசாயி. தாய் பெருமாயி, தங்கை அங்கம்மாள்.

பள்ளியில் படிக்கும் காலம் முதலே எழுத்தின் மீது ஆர்வம் அதிகம். அப்போதே சிறு கதைகள் எழுதுவேன். நாமக்கல்லில் பள்ளிக் கல்வியை முடித்த பின்னர், சென்னை பச்சையப்பா கல்லூரியில் இன்டர்மீடியட் படித்தேன். கல்லூரியில் படிக்கும் காலகட்டத்தில்தான் எழுத்தின் மீதான ஆர்வம் அதிகரித்தது. எனக்குப் பேராசிரியராக இருந்த மு.வரதராசனார் இதற்கு முக்கியக் காரணம்.

பாரதி மீதுள்ள பற்று காரணமாக, சின்னப்பன் என்ற என் பெயரை, சின்னப்ப பாரதி என மாற்றிக் கொண்டேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து, பல்வேறு பொறுப்புகளை  வகித்துள்ளேன். கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தீவிரமாக இயங்கிய போதுதான், கொல்லிமலையில் வாழும் மக்களின் சிரமங்களை அறிய முடிந்தது. அதை அடிப்படை

யாகக் கொண்டு `சங்கம்’ நாவலை  எழுதினேன். பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட முதல் தமிழ் நாவல் இதுதான். இந்த நாவலுக்காக 1986-ல் சென்னை இலக்கிய சிந்தனை அமைப்பு விருது வழங்கியது.

கிராமங்களில் மழையை எதிர்நோக்கியுள்ள சாதாரண விவசாயிகளின் வாழ்க்கை, நிலவுடைமை சமுதாயத்தில்  கொத்தடிமைகளின் நிலை குறித்த நாவல் தாகம். அதேபோல, இந்திய அளவில் சர்க்கரை ஆலைத் தொழிலாளர்கள், கரும்பு விவசாயிகளின் போராட்டம் பற்றிக் கூறும் நாவல் சர்க்கரை.  மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சுரங்கத் தொழிலாளர்களின் வர்க்கப் போராட்டங்களைப் பற்றிப் பேசும் நாவல் சுரங்கம்.

பிரெஞ்சு எழுத்தாளர் எமிலி ஜோஸ், சுரங்கத் தொழிலாளர்களின் வர்க்கப் போராட்டம் குறித்து எழுதியுள்ளார். எனினும், அதில் கொஞ்சம் கற்பனை கலந்திருக்கும். ஆனால், சுரங்கம் நாவல் முழுமையாக தொழிலாளர்களின் வர்க்கப் போராட்டத்தைப் பற்றியே பேசும் நாவலாகும்.

`பவளாயி` நாவல் காதல், பெண் அடிமைத்தனம் உள்ளிட்டவற்றை விளக்கும். அடித்தட்டு மக்கள், தொழிலாளர்கள் ஆகியோரின் வர்க்கப் போராட்டம், அவர்களது தினசரி சிரமங்களை வெளிக்கொணர்வதும், மேம்பாட்டுக்கு வழி தேடுவதும்தான் எனது நோக்கம். தாகம் நாவல் 7 மொழிகளிலும், பவளாயி சுரங்கம் நாவல்கள் 6 மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராட்டி, குஜராத்தி, வங்காளி, ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ், சிங்களம், உஷ்பெக், சமஸ்கிருதம் என  13 மொழிகளில் எனது நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

1964-65-ல் `தெய்வமாய் நின்றான்’ எனும் காவியம் மற்றும் `கிணற்றோரம்’ எனும் குறுங்காவியங்களை  எழுதியுள்ளேன்.  `தெய்வமாய் நின்றான்’ எனும் காவியம், சமூகத்தில் கீழ்நிலைப் பிரிவிலிருந்து வரும் சிறுவன் குறித்தது. நாவலுக்கும், காவியத்துக்குமிடையே என்ன வேறுபாடு என்றால், நாவல் உரைநடையாய் இருக்கும், காவியம் கவிதை நடையில் இருக்கும். பாரதியின் பாஞ்சாலி சபதம், பாரதிதாசனின் புரட்சிக் காவியம், நாமக்கல் கவிஞரின் அவனும் அவளும் ஆகியவை காவியங்கள்.

இதேபோல, 4 சிறுகதை தொகுப்பு, 2 மொழி பெயர்ப்பு நூல்கள், குழந்தைகளுக்கான `குட்டிக் கதைத் தொகுப்பு`, `நிலவுடைமை எப்போ?’ என்ற கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளேன்.

இந்த நூற்றாண்டில் இந்திய அளவில் வெளிவந்த 10  நாவல்களில் தாகம் நாவல் ஒன்றாக இருக்கும் என விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்” என்றார் மகிழ்ச்சியுடன்.

`இந்திய இலக்கியத்துக்கு கு.சின்னப்ப பாரதியின் பங்களிப்பு’ என்ற நூலில், எழுத்தாளர்கள் பொன்னீலன், கு.பாரதிமோகன், பேராசிரியர் அருணன், பா.செயப்பிரகாசம், கம்யூனிஸ்ட் இயக்க மூத்த தலைவர்  ஆர்.நல்லக்கண்ணு ஆகியோர் எழுதிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அதிக மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட நூல் திருக்குறள். இதற்கு அடுத்தபடியாக கு.சின்னப்ப பாரதியின் நாவல்கள், பல மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது என்கின்றனர் இலக்கிய விமர்சகர்கள்.  நாவல், கதைத்தொகுப்பு உள்ளிட்டவற்றுக்காக இலக்கிய அமைப்புகள் சார்பில் பல விருதுகள் இவருக்கு வழங்கப் பட்டுள்ளன. இலங்கை தமிழ் அமைப்புகள் விருது வழங்கியுள்ளன. “எனது பங்களிப்பு மற்றும் சில நன்கொடையாளர்கள் மூலம் கடந்த 2009-ம்

ஆண்டு முதல், எனது பெயரிலான அறக்கட்டளை சார்பில் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் விருதும், பண முடிப்பும் வழங்கி வருகிறேன். தற்போது ஒரு நாவல் எழுதிவருகிறேன். பெயர் இன்னும் வைக்கப்படவில்லை” என்றார் கு.சின்னப்ப பாரதி.

தலைநகரில் தடம் பதித்த கு.சி.பா.

கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் முற்போக்கு எழுத்தாளர் கு.சின்னப்ப பாரதிக்கு பாராட்டு விழா, தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றன. தாஷ்கண்ட் பல்கலைக்கழகத்திலிருந்து பேராசிரியை மக்தூபா முந்தஜா கோஜயேவா இதில் கலந்துகொண்டார்.'இந்திய இலக்கியத்தில் கு.சின்னப்ப பாரதியின் பங்களிப்பு' என்ற தலைப்பில், தலைநகரின் புகழ்வாய்ந்த படைப்பாளிகள், பேராசிரியர்கள், இதழாசிரியர்கள் மற்றும் திறனாய்வாளர்கள் பேசினர்.  அனைத்திந்திய எழுத்தாளர் சங்கம் நடத்திய இந்த நிகழ்ச்சிக்கு, பாரதிய ஞானபீடத்தின் முன்னாள் இயக்குநர்  தினேஷ் மிஸ்ரா தலைமை வகித்தார்.  இதில், `ஒளிவீசும் கலைமகள்`  சிலை கு.சி.பா.வுக்கு பரிசாக வழங்கப்பட்டது. "கு.சி.பா.வின் படைப்புகளில் மனித வாழ்க்கை, ஏழை மக்கள் படும் துன்பங்கள் எதார்த்தமாகச் சித்தரிக்கப்படுகிறது. பிரச்சினைகளை மட்டும் அவர் முன்வைப்பதில்லை. அவற்றுக்கான தீர்வுகளையும், நாவலில் வரும் இளம் தலைமுறைப் பாத்திரங்களைக் கொண்டு முன்வைக்கிறார்" என்று நிகழ்ச்சியில் பங்கேற்றோர் அவரைப் பாராட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x