Published : 19 Feb 2019 06:28 PM
Last Updated : 19 Feb 2019 06:28 PM

ஜெயலலிதாவை குற்றவாளி என கூறிய ராமதாஸுடன் கூட்டணியா?- ஓபிஎஸ், இபிஎஸ்-சை அம்மாவின் ஆன்மா தண்டிக்கும்: டிடிவி தினகரன்

ஜெயலலிதாவை குற்றவாளி என்றும், சிறையிலிருப்பார் என்றும், அவருக்கு நினைவிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்த பாமகவுடன் கூட்டணி அமைக்கும் ஓபிஎஸ், இபிஎஸ்ஸை ஜெயலலிதா ஆன்மா தண்டிக்கும் என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் பேசியதாவது:

“அரசியலில் வேறுபாடுகள் கட்சிகளிடையே இருக்கும், தேர்தல் நேரத்தில் கூட்டணி வைப்பது வாடிக்கை. ஜெயலலிதாவின்  நினைவிடத்தை கட்டக்கூடாது அவர் ஒரு குற்றவாளி, அவர் உயிருடன் இருந்திருந்தால் சிறைச்சாலையில் இருந்திருப்பார். அவருக்கு நினைவிடம் கட்டக்கூடாது என அறிக்கை கொடுத்தவர்களுடன் சேரும் அளவுக்கு ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் சென்றிருக்கிறார்கள்.

ஊடகங்கள்தான் பரபரப்பாக இருக்கிறீர்கள், என்னால் 2 மணி நேரம் போனையே கீழே வைக்க முடியவில்லை, அவ்வளவு சோஷியல் மீடியாவில் விமர்சனம். ஆளுநரிடம் பாமக சார்பில் சென்று கூறிய ஊழல் குற்றச்சாட்டுகள், அன்புமணி ராமதாஸ் அதிமுகவை, ஆட்சியை விமர்சித்து பேசிய பேச்சுகள் நாமே மறந்துப்போன பல விஷயங்களை வருகின்றன. பலகீனமான கூட்டணியை அமைத்துள்ளார்கள். ஜெயலலிதாவின் ஆன்மாவே இதற்கு தேர்தலில் தக்க பாடம் புகட்டும்.

அம்மாவின் ஆட்சி என மூச்சுக்கு முன்னூறு தடவை கூறி மக்களை ஏமாற்றியவர்கள் நினைவிடம் அமைக்க எதிர்ப்புக்காட்டியவர்கள், ஜெயலலிதா ஜெயிலில் இருப்பார் என்று சொன்னவர்களுடன் கூட்டணி வைத்துள்ளார்கள் என்றால் இவர்கள் யாருக்குத்தான் துரோகம் செய்ய மாட்டார்கள். இவர்கள் கூட்டணி பலகீனமான கூட்டணி 40 தொகுதிகளில் படுதோல்வி அடையும்.”

தேர்தலில் அதிகாரத்தை இவர்கள் பயன்படுத்துவார்களா?

ஆர்கே நகரில் இவர்கள் பயன்படுத்தாத அதிகாரமா? அனைத்தையும் மீறி மக்கள் எல்லாவற்றையும் தீர்மானிப்பார்கள். மக்கள் சக்தி வெள்ளிக்காசுக்கு மயங்காது, அதிகாரத்திற்கு அடிபணியாது.

அதிமுக தேர்தலில் தோற்கும் என்றால் யார் வெல்வார்கள்?

அமமுகதான் இதில் என்ன சந்தேகம், ஆண்டக்கட்சிகள் கதை என்னவென்று உங்களுக்கு தெரியும். ஆர்.கே.நகரில் டெபாசீட் போனது, திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட பயந்தவர்கள் அவர்களைப்பற்றி உங்களுக்கு தெரியாதா? இவ்வாறு டிடிவி தினகரன் பேட்டி அளித்தார்.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x