Last Updated : 07 Feb, 2019 03:42 PM

 

Published : 07 Feb 2019 03:42 PM
Last Updated : 07 Feb 2019 03:42 PM

பிரதமர் மோடியின் தம்பி என்பதில் பெருமை: நாராயணசாமிக்கு ரங்கசாமி பதில்

பிரதமர் மோடியின் தம்பி நான் என முதல்வர் நாராயணசாமி கூறியது மகிழ்ச்சியான விஷயம்தான் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி பதிலளித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் முதல்வராக பொறுப்பு வகித்த ரங்கசாமி, அக்கட்சியிருந்து விலகி கடந்த 2011-ம் ஆண்டு என்.ஆர். காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கிய உடன் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியமைத்தனர். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது இரண்டாம் இடத்தை பெற்று சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சியாக தற்போது செயல்பட்டு வருகின்றது.

என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் 9-ம் ஆண்டு தொடக்க விழா கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் அக்கட்சியின்  தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி கலந்துகொண்டு கட்சி கொடியை ஏற்றிவைத்து தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இயக்க பொதுச்செயலாளர் பாலன், நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், கட்சியின் எம்எல்ஏக்கள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தொடங்கிய 2 மாதத்தில் ஆட்சியை பிடித்தது. அதேபோல வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தகுந்த நேரத்தில் அறிவிக்கப்படுவார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றது போல ஒத்த கருத்துடைய கட்சிகளோடு கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்வோம்.

வரும் தேர்தலில் என்ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடுவார். நாங்கள் பாஜக கூட்டணியில்தான் உள்ளோம். கடந்த கால கூட்டணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு ராஜ்யசபா தேர்தலிலேயே அதிமுகவுக்கு ஆதரவளித்தோம். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு நெல்லித்தோப்பு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்தோம், பிரச்சாரமும் செய்தோம்.

பல நல்ல வளர்ச்சி திட்டங்களை பாஜக அரசு கொண்டுவந்துள்ளது. மோடியின் தம்பி நான் என முதல்வர் நாராயணசாமி கூறியது மகிழ்ச்சியான விஷயம்தான். அவருக்கு என் நன்றி. நாட்டுக்கு நல்லது செய்யும் பிரதமர் மோடியின் தம்பி என்பதை நான் பெருமையாக கருதுகிறேன் என்று குறிப்பிட்டார். 


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x