

தேமுதிகவுக்கு உரிய இடங்களை வழங்கும் கட்சியுடன் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்ளப்படும் என்று தேமுதிக-வின் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இரு கட்சிகளுமே கூட்டணி பேச்சுவார்த்தையில் முழுமூச்சுடன் ஈடுபட்டு ள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ள பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகளும், என்.ஆர். காங்கிரசுக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளன. மேலும், தே.மு.தி.க., த.மா.கா., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இதேபோல், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. மேலும், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்தநிலையில், சென்னையில் தேமுதிக மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனைக்கு பின் பிரேமலதா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேமுதிகவுக்கு உரிய இடங்களை வழங்கும் கட்சியுடன் கூட்டணி. தேமுதிகவின் ஒட்டு மொத்த பலம் அரசியல் கட்சிகளுக்கும், பொதுமக்களுக்கும் தெரியும்.
மக்களவை தேர்தலில் போட்டியிட முதல் நாளில் 300க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு பெற்றுள்ளனர். தேமுகவின் பலம் என்ன என்பது எங்களுக்கு நன்றாக தெரியும்.
தேமுதிகவின் பலத்துக்கேற்ற கட்சியுடன் கூட்டணி அமைக்கும். தேமுதிக தலைவர் விஜயகாந்தை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்ததற்கு தேமுதிக சார்பில் நன்றி. விஜயகாந்த் உடனான ஸ்டாலின் சந்திப்பில் அரசியலும் உள்ளது. தனிப்பட்ட முறையில் எங்களுக்கும், திமுகவுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை .
தேமுதிகவுடன் கூட்டணி வைக்க தமிழகத்திலுள்ள பெரிய கட்சிகள் முயற்சித்து வருகின்றன. 3-வது அணி உருவாக வாய்ப்பில்லை. விஜயகாந்தை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்தபோது அரசியல் பேசப்பட்டதா என்ற நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பிரேமலதா பதில் அளித்தார்.
விஜயகாந்தை ரஜினிகாந்த், ஸ்டாலின் சந்தித்ததில் நலம் விசாரிப்பு மட்டுமல்ல அனைத்தும் பேசப்பட்டுள்ளது. எந்த கட்சியுடன் கூட்டணி என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை. விஜயகாந்த் உரிய முடிவை அறிவிப்பார். தேமுதிகவிற்கு கிடைக்கும் இடங்களை பொறுத்து கூட்டணி முடிவு இருக்கும்.
ஒரு கட்சியை விமர்சித்ததால், அந்த கட்சியுடன் கூட்டணி கிடையாது என்பது இல்லை. அரசியலுக்கு என்று ஒரு வியூகம் உள்ளது. விமர்சனங்கள் என்பது அரசியலில் இருக்கும் எதார்த்தமான ஒரு விஷயம். அதுக்காக ஒரு கட்சியை விமர்சித்து விட்டு அவர்களுடன் கூட்டணி வைக்கலாமா என்ற கேள்விக்கு இடமில்லை.
எந்தக் கூட்டணிக்குப் போகப்போறோம் என்பது இந்த விநாடி வரை எங்களுக்கே தெரியாது. விஜயகாந்த் முடிவு எடுத்து அறிவிக்கப்படும், அது மக்களால் வரவேற்கப்படும் கூட்டணியாக இருக்கும். அதே போல் தனித்துப் போட்டியிடுவதற்கும் தேமுதிக ஒரு போதும் பயந்தது கிடையாது. தனித்துப் போட்டியிட்ட போது என்ன வாக்குசதவீதம் இருந்ததோ அதை விடவும் இப்போது சிறப்பாகவே உள்ளது.
கடந்த ஒரு தேர்தலை மட்டும் வைத்து தேமுதிகவின் பலத்தை கணித்து விடக்கூடாது, மக்களவை தேர்தலில் தேமுதிக பலத்தை நிரூபிக்கும். எங்கள் பலம் எங்களுக்குத் தெரியும்.
இவ்வாறு கூறினார் பிரேமலதா விஜயகாந்த்.