

துறைமுகத்தில் நின்று கொண்டிருந்த கப்பலை பார்ப்பதற்காக ரயில் மீது ஏறிய இளைஞர் மின்சாரம் தாக்கி காயமடைந்தார்.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு 11 மணியளவில் ஒரு மின்சார ரயில் நின்று கொண்டிருந்தது. அப்போது ஒரு இளைஞர் திடீரென ரயிலின் கூரையில் ஏறி நின்று துறைமுகத்தில் நின்று கொண்டிருந்த கப்பலையும், கடலின் அழகையும் ரசித்து கொண்டிருந்தார். கப்பலை பார்த்த மகிழ்ச்சியில் மேலே சென்ற மின்சார கம்பியை கவனிக்க தவறி விட்டார்.
திடீரென பேலன்ஸ் தவற கை அருகே இருந்த மின்சார கம்பியை பிடித்து விட்டார். இதில் பயங்கர சத்தத்துடன் தூக்கி வீசப்பட்டவர் பிளாட்பாரத்தில் வந்து விழுந்தார். அதைத் தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எழும்பூர் ரயில்வே போலீஸார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் கார்த்திக் (23) என்றும், டி.பி.சத்திரத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. கப்பலை பார்ப்பதற்காக ரயில் மீது ஏறியதாக கார்த்திக் கூறியிருக்கிறார்.