மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முருகன்

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முருகன்
Updated on
1 min read

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முருகன் தெரிவித்துள்ளார். 

நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் இன்று மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் ஊரக ஊடகவியலாளர்கள் பயிலரங்கு நடத்தப்பட்டது.  இதனை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முருகன் தொடங்கி வைத்தார்.

அதில் அவர் பேசுகையில், ''மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாகச் செயல்படுத்தப்படுவதால், நாட்டிலேயே தமிழகம் முன்னிலை வகிக்கிறது.  480 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட  சிறுதொழில் நிதிக்கழகம் ஷெட்யூல்டு வகுப்பு மற்றும் பழங்குடியின மக்கள் தொழில் தொடங்க கடன் உதவி அளிக்கிறது.

ஆயுஷ்மான் பாரத், ஜன்தன் திட்டம், செல்வ மகள் சேமிப்புத் திட்டம், இலவச எரிவாயு இணைப்புத் திட்டம், பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் போன்றவை மக்கள் நலனுக்காகக் கொண்டு வரப்பட்டவை. முத்ரா திட்டப் பயனாளிகளில் 70 சதவீதம் பேர் பெண்கள். இந்தத் திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு 3 லட்சம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது'' என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னோசென்ட் திவ்யா, ''மக்கள் நலத் திட்டங்களின் சிறப்பு அம்சங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்கள் மகத்தான பணியைச் செய்து வருகின்றன.  குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பத்திரிகைகள் நிர்வாகத்தோடு இணைந்து செயல்படுகின்றன.

நலத்திட்டங்களின் முக்கியத்துவத்தை பத்திரிகைகள் மக்களிடம் கொண்டு சேர்த்தால் அது அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். திட்டங்களின்  பலன்கள், தகுதியான பயனாளிகள், பயன்களைப் பெறும் வழிமுறைகள் பற்றி பத்திரிகைகள் எழுத வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்.

சென்னை பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநர் மாரியப்பன்,  துணை இயக்குநர் நதீம் துஃபைல் மற்றும் நீலகிரி மாவட்டப் பத்திரிகையாளர்கள்  இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in