Published : 19 Feb 2019 09:56 AM
Last Updated : 19 Feb 2019 09:56 AM

லட்சியவாதிகளை உருவாக்கும் கவிஞர்!- தன்னம்பிக்கை பேச்சாளர் கவிதாசன்

கவிஞர், தன்னம்பிக்கைப் பேச்சாளர், எழுத்தாளர், இளைய தலைமுறைக்கு ஊக்கமளிப்பவர், ரூட்ஸ் நிறுவனத்தின் மனிதவளத் துறை இயக்குநர், தமிழார்வலர் என்றெல்லாம் பன்முகங்கள் உண்டு கோவையைச் சேர்ந்த கவிஞர் கவிதாசனுக்கு(54). 65-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவரை அழைத்துப் பேசவைக்காத பள்ளி, கல்லூரிகளே இல்லை எனலாம். ஆனால், இவரது கவனமெல்லாம் அரசுப் பள்ளி மாணவர்களின் மீதுதான்.

“அது ஏன் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் மேம்பாட்டில் மட்டும் உங்களுக்கு தனி கவனம்?” என்று கேட்டோம் அவரைச் சந்தித்தபோது.

“ஏனெனில் நான் படித்ததெல்லாம் அரசுப் பள்ளி, கல்லூரியில் தானே!” என்றார் தனது வழக்கமான புன்சிரிப்புடன். “கோவை மாவட்டத்தில் சிறிய கிராமமான கந்தேகவுண்டன் சாவடிதான் எனது ஊர். பெற்றோர் சுப்பண்ணன்-மயிலாத்தாள். எளிய விவசாயக் குடும்பம்.

வீட்டில் கடும் வறுமை. இதனால், பிழைப்புத் தேடி ஆனைகட்டி அருகேயுள்ள அட்டப்பாடிக்கு விவசாயத் தொழிலுக்குச் சென்றோம். அங்கு தமிழ்ப் பள்ளிக்கூடம் கிடையாது. இதனால் திண்ணைப்பள்ளியில், சுப்பிரமணியம் என்ற ஆசிரியரிடம் 5-வது வரை படித்தேன். பின்னர், கோவை சின்னதடாகம் அரசு உயர்நிலைப் பள்ளியில், இலவச விடுதியில் தங்கி 10-ம் வகுப்பு வரை படித்தேன். காலையில் சோளக்கஞ்சி, கோதுமை கஞ்சிதான் கொடுப்பார்கள். அது சுத்தமாகவும் இருக்காது. போதவும் செய்யாது. சாப்பாடு போடுகிறார்களே என்பதற்காகவே என்.சி.சி.யில் சேர்ந்தேன். பள்ளியில் புலவர் அப்பாவு பெரிதும் ஊக்குவித்தார். பின்னர் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயாவில் பிளஸ் 1, பிளஸ் 2 படித்தேன்.

ராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளியில் படிக்கும்போது,  புலவர் பெரியசாமி ஒரு வீட்டுப்பாடம் கொடுத்தார். அதை செய்யவில்லை. இதனால், 50 திருக்குறள்களை மனப்பாடம் செய்துவருமாறு கூறினார். நானும் மனப்பாடம் செய்தேன். அப்போது நடைபெற்ற திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்று, 50 திருக்குறள்களையும் ஒப்புவித்து பரிசு பெற்றேன். ஆசிரியர் அளித்த தண்டனை வரமானது.

பின்னர் கோவை அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. அரசியல் அறிவியல் படித்தேன். பள்ளிப் பருவத்தில் எனக்கு எழுதுவதில் பெரிய ஆர்வம் கிடையாது. கல்லூரியில்தான் நான் கவிஞனாக மாறினேன்.

முதல் கவிதைக்கே பரிசு

1982-ல் வானம்பாடி கவிதை இயக்கத்தைச் சேர்ந்த அரங்கநாதன், `இரவிலே வாங்கினோம்,  இன்னும் விடியவேயில்லை, சுதந்திரம்’ என்று எழுதியிருந்தார். இந்தக் கவிதை என்னை யோசிக்க வைத்தது. பல நாட்கள் நான் தூங்கவில்லை. அந்தக் கவிதைக்கு மறுப்புக் கவிதை எழுதி, ஆனந்தவிகடனுக்கு அனுப்பிவைத்தேன். `விடியல் என்பது வெளியில் இல்லை. உன் விழியில் உள்ளது’ என அந்தக் கவிதையை முடித்திருந்தேன். ஆனந்தவிகடனில் இது பிரசுரமானதுடன், ரூ.50 பரிசு அனுப்பிவைத்தனர். சுஜாதா-வைப்போல, `கவிதா` என்ற பெயரில் அதை எழுதியிருந்தேன். எனினும், வகுப்பு, கல்லூரியை தெளிவாகக் குறிப்பிட்டிருந்தேன். தமிழாசிரியர் நஞ்சுண்டன் ஆனந்தவிகடனை வகுப்புக்குக் கொண்டுவந்து, மாணவர்களுடன் சேர்ந்து பாராட்டினார்.

1982-ல் பாரதியார் நூற்றாண்டு விழாவையொட்டி நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் எனக்கு முதல் பரிசு. `கவிதைக்கு தாசனான முருகேச னுக்கு முதல் பரிசு’ என்று அறிவித்தார்கள். அப்போதிருந்து எனது பெயரை கவிதாசன் என மாற்றிக் கொண்டேன். தொடர்ந்து நிறைய கவிதைகள் எழுதினேன்.  1984-ல் முதல் கவிதை தொகுப்பான `நனவுகளும் கனவுகளும்` வெளியிட்டேன்.

`அறிமுகம்` கையெழுத்துப் பிரதி

அரசுக் கல்லூரியில் படித்தபோதே `அறிமுகம்` என்ற கையெழுத்துப் பிரதியை வெளியிட்டேன். கல்லூரி தமிழ் மன்றச் செயலராகவும் தேர்வு செய்யப்பட்டேன்.

பிஎஸ்ஜி கலைக் கல்லூரியில்  எம்.ஏ. சமூகப் பணி படித்தேன்.  1986-ல் இரண்டாவது கவிதைத் தொகுப்பான  `இதய முடிச்சுகளை` வெளியிட்டேன். மேலும், `புதுக்கவிதை’ என்ற மாத இதழ் நடத்தினேன். தமிழ் பேராசிரியர் முனைவர் சம்பத்குமார் உதவியுடன், சிந்தனை மன்றம் உருவாக்கி, பல இலக்கிய நிகழ்வுகளை நடத்தினேன். கல்லூரிப் படிப்பு முடித்த பின்னர், சிங்காநல்லூர் லஷ்மி மில்ஸ் ஆலையில் தொழிலாளர் நல அதிகாரியாகப் பொறுப்பேற்றேன். 326 பேர் இன்டர்வியூவில் பங்கேற்றதில், எனது பேச்சுத் திறமையால் நான் தேர்வு செய்யப்பட்டேன். ஐந்து ஆண்டுகள் அங்கு பணிபுரிந்தேன். மாலைக் கல்லூரியில் பி.எல். படித்தேன். பின்னர், பொள்ளாச்சி  சக்தி சோயாஸ் நிறுவனத்தில்  பணியாளர் நிர்வாகப் பணி.

1995-ல் ரூட்ஸ் நிறுவனத்தில் மேலாளராகச் சேர்ந்து, இப்போது மனிதவளப் பிரிவு இயக்குநராகப் பொறுப்பு வகிக்கிறேன். கம்பவனுக்கு சடையப்ப வள்ளல்போல, எனக்கு ரூட்ஸ் நிறுவனத் தலைவர் கே.ராமசாமி. எழுத, பேச, நிகழ்ச்சிகளில் பங்கேற்க எனக்கு முழு சுதந்திரம் அளித்தார். பெரிதும் ஊக்குவித்தார். இதேபோல, பல ஆசிரியர்கள், தமிழார்வலர்கள் என்னை ஊக்கப்படுத்தினர். 

கருவறை ஓலங்கள்!

இதுவரை 10 கவிதைப் புத்தகங்கள், 50-க்கும் மேற்பட்ட தன்னம்பிக்கை நூல்கள் உள்ளிட்ட 67 நூல்கள் எழுதியுள்ளேன். 2002-ல் அனைத்திந்திய வானொலி சார்பில் போபாலில், அனைத்து மொழி கவிதை மாநாடு நடைபெற்றது. ஒவ்வொரு மொழியிலும் சிறந்த கவிதையை தேர்ந்தெடுத்து, வாசிக்கச் சொன்னார்கள். அத்தனை மொழிகளிலும் அது மொழிபெயர்க்கப்பட்டு, அதுவும் வாசிக்கப்படும். கருவிலேயே சிதைக்கப்படும் பெண் சிசுக்களுக்காகவும், பெண் கருக்கொலைக்கு எதிராகவும் நான் எழுதிய `கருவறை ஓலங்கள்` கவிதை சிறந்த கவிதையாக தேர்வு செய்யப்பட்டு, மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தியாவில் உள்ள 180 வானொலிகளிலும், அந்தந்த மொழிகளில் ஒலிபரப்பானது. மேலும், எல்லா பத்திரிகைகளிலும் வெளியானது. பல கல்லூரி, பல்கலைக்கழகங்களில் `கருவறை ஓலங்கள்` பாடமாகவும் வைக்கப்பட்டது” என்றார் பெருமிதத்துடன். “எப்போது தன்னம்பிக்கை பேச்சாளராக மாறினீர்கள்?” என்று கேட்டோம். “அரசு கலைக் கல்லூரியில் படிக்கும்போது, கிருஷ்ணம்மாள் கல்லூரியில் கலைப் போட்டிகள் நடத்தினார்கள். வழக்கமாக பேச்சுப் போட்டியில் பங்கேற்பவர்கள் அன்று போகவில்லை. ஆசிரியர் என்னை போகச் சொன்னார். தன்னம்பிக்கை குறித்து பேசினேன். கன்னிப் பேச்சிலேயே முதல் பரிசு. அது என்னை ஊக்கமளித்தது.

1991-ல் சாலை விபத்தில் கால் எலும்பு முறிந்து, கே.ஜி. மருத்துவமனையில் 120 நாட்கள் இருந்தேன். அப்போது நிறைய தன்னம்பிக்கை கட்டுரைகளை எழுதினேன். அதை டாக்டர் பக்தவத்சலம் படித்துப் பார்ப்பார். 1996-ல் அவரை சந்தித்தபோது, `நீ எழுதிய கட்டுரைகள் என்னவாயிற்று?` என்று கேட்டார். `அப்படியே இருக்கிறது` என்றேன். உடனே ரூ.10 ஆயிரம் கொடுத்து, `அவற்றை புத்தகமாக வெளியிடு` என்றார். `தன்னம்பிக்கையே வெற்றி` என்ற தலைப்பில் வெளியான அந்த புத்தகமே, முதல் தன்னம்பிக்கை நூல். தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளில் தன்னம்பிக்கை குறித்து பேசினேன். இதுவரை சுமார் 30 லட்சம் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களிடம் பேசியுள்ளேன். நிறைய பேர் தொழிலதிபர்கள், அதிகாரிகளாக உயர்ந்துள்ளனர் என்றார்.

2002-ல் பிஎஸ்ஜி கல்லூரி, சிறந்த முன்னாள் மாணவர் என்ற விருதை அப்துல் கலாம் கையால் இவருக்கு வழங்கியுள்ளது. 2014-ல் தமிழக அரசு  தமிழ்ச் ‘செம்மல் விருது’ வழங்கி கவுரவித்தது. அதன் பிறகு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டுவதற்காக, பொதுநல அமைப்புகளுடன் சேர்ந்து `நெல்லிக்கனி` என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இதன் மூலம் 50 ஆயிரம் மாணவர்களை சந்தித்திருக்கிறார். கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களில் மாதந்தோறும் இலவச தன்னம்பிக்கைப் பயிலரங்குகளையும் நடத்தி வருகிறார்.

இவரது மனைவி கிருஷ்ணவேணி. முதுநிலைப் பட்டதாரியான இவர் தற்போது விவசாயத்தில் ஈடுபட்டுள்ளர். மகன் கவி சித்தார்த், பொறியாளர். மற்றொரு மகன் கவி வித்யார்த், மருத்துவ மாணவர்.

2014-ல் மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில், தமிழக அரசுப் பிரதிநிதியாகப் பங்கேற்றுள்ளார். 2017-ல் அமெரிக்கா டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள தல்லாஸ் பகுதியில் நடைபெற்ற தமிழ் அறக்கட்டளை மாநாட்டில் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டுள்ளார்.  ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்காக, கோவை, திருப்பூரில் உள்ள தொழில், கல்வி நிறுவனங்களிடம் சுமார்  ரூ.1 கோடி திரட்டித் தந்தார். 50-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் பொதுநல அமைப்புகள் உதவியுடன், நூலகம் அமைக்கவும் இவர் காரணமாக இருந்துள்ளார்.

“லட்சியவாதிகளை உருவாக்குவதே எனது லட்சியம். ஒழுக்கம், தன்னம்பிக்கை, செயல்திறன், சொன்னதைக் காப்பாற்றும் வாக்குறுதி, படைப்புத் திறன் ஆகியவை வெற்றியைத் தேடித் தரும். நிறைய வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. மாணவர்களும், இளைஞர்களும் தொழில்முனைவோராக மாற வேண்டும். இது என்னடா வாழ்க்கை என்று சொல்லாமல், இது என்னோட வாழ்க்கை என்று சொல்ல வேண்டும்” என்று முடித்துக் கொண்டார் கவிதாசன்.

“முடங்கிக் கிடந்தால் சிலந்தியும் உன்னைச் சிறைப் பிடிக்கும்! எழுந்து நின்றால் எரிமலையும் உனக்கு வழிகொடுக்கும்” என்ற  கவிதாசனின் கவிதை வரிகள் நிறைய உற்சாகத்துடன் வழியனுப்பிவைத்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x