

வாலாஜாபாத் அருகே கல்லூரி மாணவனை கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
வாலாஜாபாத் சிவன்படை தெருவைச் சேர்ந்தவர் எஸ்.மதன் (19). இவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவர் கடந்த ஏப்ரல் 3-ம் தேதியில் இருந்து காணவில்லை. இதுகுறித்து வாலாஜாபாத் காவல்நிலையத்தில் பெற்றோர் புகார் தெரிவித்த நிலையில், ஊத்துக்காடு பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் சடலம் ஒன்று வியாழக்கிழமை மீட்கப்பட்டது. அது காணாமல் போன மதன் என்பது தெரிய வந்தது. இதுபற்றி பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் நடந்த விசாரணையில் கடைசியாக ஊத்துக்காடு பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் வினோத், சதீஷ் ஆகியோருடன் மதன் சென்றதாக பெற்றோர் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமை வினோத், சதீஷ் ஆகியோரிடம் போலீஸார் நடத்திய விசாரணை யில் மதனை கிணற்றில் தள்ளி கொன்றதாக இருவரும் ஒப்புக் கொண்டனர்.
கடந்த ஏப்.3-ம் தேதி வினோத், சதீஷ், மதன் ஆகிய மூவரும் ஊத்துக்காடு சென்று, அங்குள்ள பாழடைந்த கிணறு அருகே மது அருந்தியுள்ளனர். அப்போது வினோத்தின் அக்கா திருமண நிச்சயம் குறித்து மதன் மோசமாக விமர்சித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வினோத் மற்றும் சதீஷ் ஆகியோர் மதனை அருகில் இருந்த கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளனர் என்பது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.