Published : 26 Feb 2019 08:17 PM
Last Updated : 26 Feb 2019 08:17 PM

கமல் - பிரகாஷ்காரத் சந்திப்பில் நடந்தது என்ன?- மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விளக்கம்

மக்கள் நீதிமய்ய நிறுவனர் கமல்ஹாசன் டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பிரோ உறுப்பினர் பிரகாஷ் காரத்தை சந்தித்தப்போது நடந்தது என்ன? என்பது குறித்து மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது. இந்நிலையில் கூட்டணிக்காக நேர்மையான கட்சிகளுடன் இணைவோம் ஊழல் கட்சிகளை தூக்கி சுமக்க விரும்பவில்லை என கமல் பேட்டி அளித்திருந்தார்.

கமல்ஹாசன் திமுக, அதிமுக கூட்டணியில் இல்லை. ஆனால் கமல்ஹாசனை இரண்டுக்கட்சிகளின் தலைவர்களும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று டெல்லி சென்ற கமல்ஹாசன் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் ஆகியோரை சந்தித்து பேசினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ளது. இந்நிலையில் கமல்ஹாசன் டெல்லி தலைமையை சந்தித்து பேசிவிட்டு வந்ததாக செய்திகள் வெளியானது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சங்கடத்தை உருவாக்கியது.

இதையடுத்து தன்னிலை விளக்கமாக சந்திப்பில் என்ன நடந்தது, பேசப்பட்டது என்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் செய்தியாளர்களிடம் விளக்கியுள்ளார்.

சிதம்பரத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:

“மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமலஹாசன் ஏற்கெனவே உள்ள நட்பின் அடிப்படையில் டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத்தை சந்தித்துள்ளார்.

அப்போது தமிழக தேர்தல் குறித்து கமல் பேசியுள்ளார். அதற்கு பிரகாஷ்காரத், இந்தியாவில் பாஜகவை வீழ்த்த ஒவ்வொரு மாநிலத்திலும் வலுவான அணியை அமைத்து வருகிறோம். தமிழகத்தில் திமுகவுடன் தொகுதி உடன்பாடு செய்வது என்று ஏற்கெனவே முடிவெடுத்து விட்டோம்.

இதற்கான ஒப்புதலை டிசம்பர் மாதமே தமிழகத்திற்கு கொடுத்துவிட்டோம். இப்போது தொகுதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எனவே தேர்தல் குறித்து விவாதிப்பதற்கு வாய்ப்பில்லை. தொடர்ந்து நண்பர்களாக இருப்போம் என்று கூறியிருக்கிறார்.”

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x