Published : 08 Sep 2014 10:00 AM
Last Updated : 08 Sep 2014 10:00 AM

சிலிண்டர்களுக்கு கூடுதல் தொகை கேட்கும் காஸ் ஏஜென்சி ஊழியர்கள்: பொதுமக்கள் புகார் - ஐ.ஓ.சி எச்சரிக்கை

வீடுகளுக்கு சப்ளை செய்யும் சிலிண்டர்களுக்கு காஸ் ஏஜென்சி ஊழியர்கள் அதிக தொகை கேட்பதாகவும் தர மறுத்தால் வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாகவும் பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.

வீட்டு உபயோகத்துக்கான காஸ் இணைப்பு பெற்றுள்ளவர்களுக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மானியம் விலையில் (ரூ.401) வழங்கப்படுகின்றன. அதற்கு மேல் தேவைப்படுவோருக்குமானியம் இல்லாமல் ரூ.902-க்கு விற்கப்படு கிறது. வீடுகளுக்கு சிலிண்டர் சப்ளை செய்யும் பணியை காஸ் ஏஜென்சி ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

வாடிக்கையாளர்கள் சிலிண்ட ருக்கான தொகையுடன் ஊழிய ருக்கு ‘டிப்ஸ்’ ஆக ரூ.10 அல்லது ரூ.15 கூடுதலாக தருவது வழக்கம். நீண்ட தூரம் உள்ள வீடுகளுக்கு சப்ளை செய்யும் ஊழியர்கள் ரூ.25 வரை கூடுதலாக கேட்டுப் பெறுகின்றனர். ஆனால், சில இடங்களில் ஊழியர்கள் அடாவடியாக ரூ.50 வரை தரவேண்டும் என்று கட்டாயப்படுத் துவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

இதுகுறித்து திரு.வி.க. நகர் பகுதியில் பாரத் கேஸ் பயன்படுத்தும் வாடிக்கையாளர் ஒருவர் கூறும்போது, ‘‘எஸ்.எம்.எஸ். மூலம் கடந்த மாதம் காஸ் பதிவு செய்தேன். மானிய விலை சிலிண்டரின் விலையை விட கூடுதலாக ரூ. 50 கொடுக்க வேண்டும் என்று டெலிவரி பாய் (காஸ் ஏஜென்சி ஊழியர்) கட்டாயப்படுத்தினார். தர மறுத் ததால் வீட்டில் ஆள் இல்லை என கூறி சிலிண்டரை திருப்பி எடுத்துச் சென்றுவிட்டார்’’ என்றார்.

‘‘சிலிண்டரை தூக்கி வருகிறார் களே என பரிதாப்பட்டு, நாமாக கொஞ்சம் காசு கொடுத்த காலம் மாறிவிட்டது. தற்போது குறைந் தது ரூ.25-ல் இருந்து ரூ.50 வரை தரவேண்டி உள்ளது. ஏஜென்சியில் புகார் செய்தாலும் பயனில்லை’’ என்கிறார் ஆட்டோ ஓட்டுநர் சந்திரசேகர்.

காஸ் ஏஜென்சிகளிடம் கேட்ட போது, ‘‘வாடிக்கையாளர்களிடம் கூடுதல் தொகை வசூலிக்கக் கூடாது என ஊழியர்களிடம் அறிவுறுத்தியுள்ளோம். அதையும் மீறி அதிக தொகை வசூலித்தால் வாடிக்கை யார்கள் ஏஜென்சியிடம் எழுத்து மூலமாக புகார் கொடுக்க வேண்டும். வீட்டில் ஆள் இல்லை என்று கூறி திருப்பி எடுத்து வரப்படும் சிலிண்டர்கள், 5 நாட்கள் வரை ஏஜென்சியிலேயே வைக்கப்பட்டிருக்கும்’’ என்றனர்.

இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரியிடம் கேட்ட போது, ‘‘வாடிக்கையாளர்கள் போனில் தான் புகார் அளிக்கின்றனர். அதன்மீது நடவடிக்கை எடுக்க போதிய தகவல்கள் கிடைப்பதில்லை. எனவே, தேனாம்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் அலுவலகத்துக்கு வந்து எழுத்து மூலமாக புகார் தரலாம். அல்லது >www.indane.co.in என்ற இணையதளத்தில் இ-மெயில் மூலமும் புகார் தெரிவிக்கலாம். ஆதாரத்துடன் தரப்படும் புகார் மீது நடவடிக்கை எடுப்போம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x