Published : 14 Feb 2019 10:42 AM
Last Updated : 14 Feb 2019 10:42 AM

சாலை விபத்தில் சிக்குபவர்களுக்கு உதவும் பொதுமக்களுக்கு பிரச்சினை வராது: போக்குவரத்து காவல்துறை வேண்டுகோள்

சாலையில் விபத்தில் சிக்குபவர்களுக்கு உதவவேண்டும், இதனால் போலீஸ் பிரச்சினை எதுவும் வராது என உச்சநீதிமன்ற உத்தரவை மேற்கோள்காட்டி போக்குவரத்து காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

சாலை விபத்தில் சிக்கி காயமடைவோர், உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவினால், காவல்துறைக்கு தகவல் கொடுத்தால் நம்மை சாட்சி, கோர்ட் என அலைக்கழிப்பார்களோ என பொதுமக்கள் அஞ்சும் சூழ்நிலையில் நமக்கெதற்கு வம்பு என நகர்ந்து விடுகின்றனர். இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

சென்னை போக்குவரத்து காவல் துறை கூடுதல் ஆணையர் அருண் வெளியிட்டுள்ள வேண்டுகோள்:

''மக்கள் தொகை மற்றும் வாகனப் பெருக்கத்தினால் சாலையில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து விபத்துக்களும் அதிகரித்து வருகின்றன. விபத்துகள் ஏற்படும் போது பலர் அருகில் இருந்தாலும், விசாரணை மற்றும் வழக்குகளில் சேர்க்கப்பட்டு தாங்கள் பல சிரமங்களுக்கு ஆளாக நேரிடுமோ என தவறாக கருதிக்கொண்டு விபத்துகள் பற்றிய தகவலைத் தெரிவிக்கவும், விபத்துகளில் காயம் பட்டவர்களுக்கு உதவி செய்யவும் பொதுமக்கள் தயக்கம் காட்டுகிறார்கள்.

இதனால் பெரும்பாலான விபத்துகளில் காயம்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இது போன்று தவறான கருத்துகளைக் களையவும், விபத்து குறித்து தகவல் தருபவர்களையும், காயம் பட்டவர்களுக்கு உதவி செய்பவர்களையும் எந்தவித இன்னலுக்கும் ஆளாக்காமல் பாதுகாக்கவும், உச்ச நீதிமன்ற ஆணையின்படி அரசு விதிமுறைகளை (Good Samaritan Guidelines) வகுத்துள்ளது.

சாலை விபத்து ஏற்படும் பொழுது அருகில் இருப்பவர் அல்லது அந்த விபத்து நடந்த இடத்தைக் கடந்து செல்லும் பொழுது, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமாக முன்வந்து உதவி செய்யும் நபர் அல்லது நபர்கள் இதன் மூலம் பாதுகாக்கப்படுவார்கள். (Ministry of Road Transport and Highways Notification No.25035/101/2014-RS Dated: 12.05.2015 and 21.01.2016 and Hon’ble Supreme Court Orders in W.P. (C) No.235/2012, Dated: 30.03.2016) விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய முன்வரும்  நபர்கள் (Bystander or Good Samaritan) பாதிக்கப்பட்டவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்துவிட்டுச் சென்றுவிடலாம்.

அவர்களிடம் வேறு எந்தக் கேள்வியும் கேட்கப்பட மாட்டாது. விபத்தை நேரில் பார்த்தவர் மட்டும் முகவரியை மட்டும் தெரிவித்துவிட்டு செல்லலாம். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்க்கும் பாதிக்கப்பட்டவரின் உறவினரல்லாத மேற்படி நபர்களை, உச்ச நீதிமன்ற ஆணை மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படி, சம்பந்தப்பட்ட தனியார் அல்லது அரசு மருத்துவமனை நிர்வாகம் மருத்துவ சிகிச்சைக்கு அல்லது பதிவுக்கு தேவையான பணத்தைச் செலுத்த சொல்லலாகாது.

மேலும் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை வழங்க மறுத்தால் சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரி ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய முன்வரும் மேற்படி நபர்கள்,  தங்களது பெயர் மற்றும் தனிப்பட்ட தகவல்களை மருத்துவமனையின் MLC Form உட்பட வேறு எந்த விதத்திலும் தெரிவிப்பது சம்பந்தப்பட்ட நபரின் விருப்பத்துக்கு உட்பட்டது ஆகும்.

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய முன்வரும் மேற்படி நபர்கள், அந்த விபத்து தொடர்பான எந்த வித சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்கு பொறுப்பாக மாட்டார்கள்.

சாலை விபத்துகள் குறித்த தகவல்களை காவல்துறை அல்லது காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கும் நபர்கள் தங்களது தனிப்பட்ட தகவல்களைத் தெரிவிக்க நிர்பந்திக்கப்படமாட்டார்கள். தனிப்பட்ட தகவல்களைத் தெரிவிக்க கட்டாயப்படுத்தினால் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்  மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளும் பொழுது மேற்படி உதவி செய்யும் நபர்களை விபத்து வழக்கில் சாட்சியாக இருக்கும்படி கட்டாயப்படுத்தமாட்டார்கள். விபத்து வழக்கில் சாட்சியாய் இருப்பது சம்பந்தப்பட்ட நபரின் விருப்பத்துக்கு உட்பட்டது ஆகும்.

விபத்து குறித்து விசாரணை நடத்தும் காவல்துறையினர் உதவி செய்த நபரிடம் விபத்தில் பாதிக்கப்பட்டவர் குறித்த தகவல்களைப் பெற்றுக்கொண்டு தகவல் தெரிவித்த நபரை தேவையில்லாமல் காத்திருக்கும்படி நிர்பந்திக்கமாட்டார்கள்.

விபத்து வழக்குகளில் தாமாக முன்வந்து சாட்சியாக இருக்க சம்மதிக்கும் நபர்களை விசாரணை அதிகாரிகள் காவல் நிலையத்திற்கு வரும்படி கட்டாயப்படுத்த மாட்டார்கள். மாறாக மேற்படி நபரின் இல்லம் அல்லது அவர்கள் விரும்பும் இடத்திற்கு விசாரணை அதிகாரி சாதாரண உடைகளில் சென்று மிகுந்த மரியாதையுடன் ஒரு முறை மட்டுமே விசாரணை மேற்கொள்வார்கள்.‌

மேற்படி விசாரணையானது குற்ற விசாரணை முறை சட்டம் பிரிவு 284  மற்றும் 296 ஆகிய பிரிவுகளுக்கு உட்பட்டு மேற்கொள்ளப்படும். கூடுமானால் வீடியோ கான்பிரன்சிங் முறை பயன்படுத்தப்படும்.

எனவே பொதுமக்கள் சாலை விபத்துகள் குறித்த தகவல்களை காவல்துறைக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் எனவும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த வித தயக்கமுமின்றி உதவி செய்து விலைமதிப்பில்லாத மனித உயிர்களை காப்பாற்ற ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது''.

இவ்வாறு போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் அருண், வேண்டுகோள் வைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x