

ஆந்திர மாநிலம் சித்தூர் முருகம் பட்டை சேர்ந்தவர் தேவேந்திரன். ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் மோகன்ராஜ் (18). சித்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 19-ம் தேதி உறவினர் பிறந்த நாள் விழாவுக்கு, நண்பருடன் மோகன்ராஜ் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு பைக் மோதியது. நிலைத்தடுமாறி கீழே விழுந்த மோகன்ராஜுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர், கடந்த 20-ம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், அவரது தலையில் ஏற்பட்ட காயத்தால் மூளை கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த மோகன்ராஜ், கடந்த 21-ம் தேதி திடீரென மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன்வந்தனர்.
அதன்படி அறுவைச் சிகிச்சை செய்து மோகன்ராஜ் உடலில் இருந்து சிறுநீரகங்கள், கல்லீரல், இதய வால்வு, கண்கள் எடுக்கப்பட்டன.
கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கு பொருத்தப் பட்டது. மற்றொரு சிறுநீரகம் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை நோயாளிக்கும், இதய வால்வு மற்றும் கண்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன.