தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி நேரடியாக பேச்சு நடத்த வேண்டும்: ஞானதேசிகன் வலியுறுத்தல்

தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி நேரடியாக பேச்சு நடத்த வேண்டும்: ஞானதேசிகன் வலியுறுத்தல்
Updated on
1 min read

மீனவர்களின் படகுகளை மீட்க இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி நேரடியாக பேச வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் வலியுறுத்தி உள்ளார்.

சென்னையில் நிருபர்களிடம் ஞானதேசிகன் நேற்று கூறியதாவது:

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்துவருகிறது. மீனவர் பிரச்சினை அபாயகரமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு இருந்த போது, மீனவர்களையும் படகு களையும் மீட்பதற்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீனவர்கள் பிடிபட்ட மறுநாளே விடுவிக்கப்பட்டனர். மோடி ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் மீனவர்கள் பிரச்சினை தீரும் என்று பாஜகவினர் பிரச்சாரம் செய்தனர்.

ஆனால், மோடி ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்குமேல் ஆகியும் பறிமுதல் செய்யப்பட்ட மீனவர்களின் படகுகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. அவற்றை ஏலம் விடுவதாக வரும் தகவல்கள் வேதனை அளிப்பதாக உள் ளன.

தேர்தல் நேரத்தில் பாஜகவினர் என்ன வாக்குறுதி அளித்தார்களோ, அதை நிறைவேற்ற வேண்டும். மீனவர் பிரச்சினையில், தமிழக பாஜகவினர் குழப்பத்தில் இருக்கின்றனர். அதனால், அக்கட்சியின் நிர்வாகிகள் ஆளுக்கொரு கருத்தை சொல்கின்றனர்.

இது இரு நாடுகள் சம்பந்தப்பட்ட பிரச்சினை. எனவே, பிரதமர் மோடி நேரடியாக இலங்கை அதிபர் ராஜபக்சவுடன் பேசி, மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையில் 13-வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்தி, அங்கு தமிழர்கள் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் கருத்து. இதைத்தான் ஆட்சியில் இருந்தபோதும் வலியுறுத்தினோம்.

இவ்வாறு ஞானதேசிகன் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in