Published : 12 Feb 2019 03:42 PM
Last Updated : 12 Feb 2019 03:42 PM

கலாச்சாரச் சீரழிவுக்கு வித்திடும் டிக் டாக் செயலிக்குத் தடை: சட்டப்பேரவையில் அமைச்சர் மணிகண்டன் உறுதி

சட்டப்பேரவையில் உறுப்பினர் தமீமுன் அன்சாரியின் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மணிகண்டன், ''சமூக வலைதளங்களில் இளைஞர்கள், பெண்கள், இளம் பருவத்தினரை அதிகம் பாதிக்கும் ‘டிக் டாக்’ செயலியைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்'' என உறுதியளித்தார்.

சமீபகாலமாக ‘டிக் டாக்’ எனும் செயலி அனைவராலும் பகிரப்படுகிறது. அதில் சினிமா பாட்டுக்கு ஆடிப்பாடுவது, டப்மேஷ் செய்வது, சினிமா வசனங்களைப் பேசுவது, சாகசத்தில் ஈடுபடுவது என பல்வேறு செயல்களை 'டிக் டாக்'கில் பதிவு செய்கின்றனர்.

'டிக் டாக்', 'மியூசிக்கலி' போன்ற செயலிகள் பலரது நேரத்தை ஆக்கிரமித்துள்ளன. குடும்பப் பெண்கள், நடுத்தர வயதைக் கடந்தவர்கள் சினிமா பாடலுக்கு வாயசைத்தும், நடனம் ஆடியும் காணொலியை வெளியிடுகின்றனர்.

சிலர் 'டிக் டாக்', 'மியூசிக்கலி' ஆப் போன்றவற்றை டவுன்லோடு செய்து அதையே முழுநேரமும் பார்த்து பொழுதைக் கழிக்கின்றனர். 'டிக் டாக்', வாட்ஸ் அப்களில் ஸ்டேட்டஸ் பதிபவர்கள் அதன் காரணமாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகிறது. அவர்கள் வீடியோ மார்பிங் செய்யப்பட வாய்ப்புள்ளது.

இந்தச் செயலியில் நேரத்தைக் கழிப்பவர்கள் அவர்களது கவனச்சிதறல் காரணமாக படிப்பு, வேலைகளில் கவனம் செலுத்த முடியாமல் தோல்வியைத் தழுவுகின்றனர். நாளுக்கு நாள் இச்செயலி ஆபாசத்தின் உச்சகட்டமாகச் சென்று கொண்டிருக்கிறது. இது குறித்து பலரும் ஆட்சேபித்து வரும் நிலையில் சட்டப்பேரவையிலும் இது இன்று எதிரொலித்தது.

சட்டப்பேரவை விவாதத்தில் கலந்துகொண்ட மஜக உறுப்பினர் தமீமுன் அன்சாரி இதுகுறித்துப் பேசினார்.

'' 'டிக் டாக்' செயலி கலாச்சாரத்திற்குச் சீரழிவு ஏற்படுத்தும். சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும். மாணவர்கள், கல்லூரி மாணவ மாணவியர், இளம்பெண்கள், குடும்பப் பெண்கள் அனைவரிடமும் 'டிக் டாக்' அதிகமாக பார்க்கப்பட்டு வருகிறது. ஆபாசத்தின் வடிவமாக வீடியோக்கள் பதிவு செய்யப்படுகின்றன.

பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். இதனால் அவர்கள் கல்வி பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தடை செய்யவேண்டும் என பல அரசியல் கட்சித் தலைவர்களும் தடை செய்யக் கோரி வருகின்றனர். இந்நிலையில் கலாச்சாரச் சீரழிவுக்கு வழிவகுக்கும் இத்தகைய 'டிக் டாக்' செயலியைத் தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமா?'' என தமீமுன் அன்சாரி கேள்வி எழுப்பினார்.

இதற்குப்  பதிலளித்த தமிழக தகவல் தொடர்புத் துறை அமைச்சர் மணிகண்டன், '' 'டிக் டாக்' செயலி எங்கிருந்து இயக்கப்படுகிறது என்பதை ஆராய்ந்து அவர்களை தொடர்புக் கொண்டு தடை விதிக்க முயற்சி எடுக்கப்படும்.

ப்ளூவேல் என்கிற விளையாட்டு பலரையும் பாதித்தபோது அதுகுறித்துப் பேசி அந்த சர்வர் அமெரிக்காவில் இருப்பதை அறிந்து தடை செய்ய வைத்தோம். அதேபோன்று 'டிக் டாக்' செயலியின் தலைமையிடத்தில் தொடர்புகொண்டு மத்திய அரசின் உதவியுடன் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்'' என அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x